Skip to main content

ஊரடங்கு நீட்டிப்புக்கு முன்பாக உரிய முன் ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: தமிமுன் அன்சாரி

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

ஊரடங்கு நீட்டிப்புக்கு முன்பாக, உரிய முன் ஏற்பாடுகளில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று ம.ஜ.க. பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.

  mjk


ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்தும்  என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக பல இடங்களில் சிக்கித் தவிப்பவர்கள் தமிழகத்திற்குள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல, 48 மணி நேரம் போக்குவரத்து தளர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனையில் இருப்பவர்கள், அது இல்லை (நெகட்டிவ்) என தெரிய வந்ததும், அவர்கள் விரைந்து வீடு திரும்பி, உரிய பின் தொடர் கிசிச்சைகளை வீடுகளிலேயே தனிமையில் தங்கி  மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது போல் 19 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை 500 ரூபாய்க்கு வழங்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்புக்குரியது. 

 

nakkheeran app



அத்துடன் கிரிமிநாசினி, சோப்பு, கையுறை, முககவசம் ஆகியவற்றையும் தமிழக அரசு வீடு தோறும் இலவசமாக வழங்க  வேண்டும் என்றும், இரண்டாம் கட்ட நிவாரணமாக ஒரு ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்தும் தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அதுபோல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மீது நடத்தப்படும் வீட்டு வன்முறைகளை தடுக்கும் வகையில் உரிய கவுன்சிலிங் நடத்தவும், அது குறித்த புகார்கள் மீது உரிய துரித நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தேவையான நிதியுதவிகளை தாராளமாக  செய்திட முன் வரவேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.