/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/607_28.jpg)
கலவரங்களை தூண்டுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப நாட்களாக தமிழகத்தில் அமைதியை குலைத்து வன்முறைகளை உருவாக்க சிலர் முயற்சித்து வருவது கவலையளிக்கிறது.
உலகில் 200 கோடி மக்கள் மிகவும் மதிக்கும் இறைத்தூதர் எனப் போற்றப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்து வர்மா என்பவர் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
அதுபோல் இந்து சமுதாய மக்கள் கொண்டாடும் முருகன் கடவுளையும், கந்தசஷ்டி கவசத்தையும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் செய்தி வெளியிட்டிருப்பதும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதனிடையே நேற்று கோவையில் தமிழர்கள் மிகவும் மதிக்கும்தந்தை பெரியாரின் சிலையை சிலர் காவிச்சாயம் பூசி அவமதித்திருப்பதும் கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது.
ஒரு தரப்பின் நம்பிக்கைகளை, மதீப்பீடுகளை அவமதிப்பது பெரும் குற்றமாகும். இதனால் பரஸ்பர உறவுகளும், பொது அமைதியும் கெடுகிறது.
எனவே இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இது போன்ற குற்றங்களுக்கு ஆதரவாக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் மீதும் பாரபட்சமின்றி தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு இதில் உறுதி காட்ட வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திகேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)