Advertisment

அரசு பொது விடுமுறை - சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Advertisment

தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய கூறுகளில் வாழ்ந்த தமிழர் நிலம் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக முப்பாட்டன் முருகன் திகழ்கிறார். ஐவகை நிலங்களில் தலைநிலமான குறிஞ்சி நிலத்தின் மலைகளில் இருந்துதான் உலகின் முதல் உயிரினம் தோன்றியது என்பதும், அந்த முதல் உயிரியின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய மனித இனத்தில் முதல் இனம் தமிழினம் என்பதும் உயிர்களின் பரிணம அறிவியலில் இருந்து அறிகிறோம். இத்தகையச் சிறப்புடைய நிலமாகி குறிஞ்சி நில முதல்வனாக முருகக்கடவுள் தமிழர்களால் வழிபடப்படுகிறார். பத்தாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுத்த ஆரியர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஏற்கனவே இங்குள்ள முருகனை ஆரியமயப்படுத்தினாலும் முருகவழிபாட்டை தமிழ்நாட்டை விட்டு நகர்த்தவில்லை. இருப்பினும், எங்கெல்லாம் தமிழர்கள் குவிந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களால் முருகன் கோயில் நிறுவப்பட்டு வழிபடப்பட்டு வருகிறார். சிங்கப்பூர், மலேசியா, ஈழம், கனடா, லண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா இடங்களிலும் முருகன் கோயில்கள் அமைக்கப்பட்டு தமிழர்களின் வழிபாட்டுக் கடவுளாக முருகன் திகழ்கிறார்.

Seeman

இத்தகைய சிறப்பிற்குரிய முத்தமிழ் முருகன் பிறந்த தினமாக 'தைப்பூச நாள்' தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வானவியல் நிபுணத்துவப்படி ,ஆண்டின் இறுதியில் தென்திசையில் சுழல்கிற கதிரவன், வானில் பூச நட்சத்திரம் மக்களின் பார்வைக்கு படி வருகின்ற நொடியில் கதிரவன் தென்திசை மாற்றி வடதிசையில் சுழலத் தொடங்குவதாகவும், அந்த நாளையே தமிழர்கள் தமிழர் இறையோன் முருகனின் பிறந்த நாளாக தமிழர்கள் கொண்டாடுவதாகவும் அறியப்படுகிறது.‌ இத்தகையப் பெருமைக்கும் ,சிறப்பிற்கும் உரிய தைப்பூசப்பெருவிழா திட்டமிட்டு ஆரிய-திராவிட அரசுகளால் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆரிய ஆகமவிதிக்கு உட்படாத அழகு தமிழின் மறுவடிவமாக முருகன் மீது நம்பிக்கையைக் கொண்டவர்கள் தமிழர்கள். இந்த நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெரும் தைப்பூசப்பெருவிழாவை முன்னிட்டு அந்த நாடு அரசுப்பொது விடுமுறையை அறிவித்து உள்ளது.

Advertisment

இந்த மண்ணிற்கு தொடர்பே இல்லாத பல்வேறு பண்டிகைகளுக்கு தமிழக அரசு விடுமுறைகளைக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த தமிழ் மண்ணில் தமிழர் இறையோன் முருகனின் பிறந்த நாளிற்கு இன்றுவரை அரச விடுமுறை வழங்காதது மிகுந்த உள்நோக்கம் உடையது. தமிழர்களுக்கு தொடர்பில்லாத ஆங்கிலப் புத்தாண்டு , தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, ஓணம் என எத்தனையோ பண்டிகைகளுக்கு விடுமுறையை கொடுத்த தமிழக அரசு இதுவரை முருகனின் தொடர்பான எந்த ஒரு விழாவிற்கும் விடுமுறை வழங்காதது ஏன் ? எனும் கேள்வி‌ எழுகிறது. உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களின் இக்கோரிக்கையை ஏற்று வருகின்ற தைப்பூச நாளன்று (பிப்ரவரி 08, தை 20) தமிழக அரசு அரசுப்பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

திருமுருகனின் தைப்பூசப் பெருவிழாவை மிக சிறப்பாகக் கொண்டாட வீரத்தமிழர் முன்னணி திட்டமிட்டுள்ளது. தைப்பூச நாளன்று தமிழகம் முழுவதும் திருமுருகன் குடில் அமைத்து, முருகனின் படம் மற்றும் வேல் இவைகளை வைத்து வணங்கி, தேனுடன் கலந்த திணைமாவு மற்றும் பழங்களைப்‌ பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடி தைப்பூசத்தில் இருந்து 3 ஆம் நாள் மாலை அவரவர் வாழ்கின்ற பகுதிகளின் முருகன் ஊர்வலம் நடத்த வீரத்தமிழர் முன்னணி திட்டமிட்டு உள்ளது.

அதன் தொடர் நிகழ்வாக பிப்ரவரி 09 அன்று முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தையடுத்த சாமிமலையில், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பன், காவடியாட்டம், மயிலாட்டம், பறையிசை என அனைத்துக்கலைகளும் அணிவகுக்க திருமுருகன் ஊர்வலம் நடக்க இருக்கிறது. அன்று மாலை திருமுருகன் பெருவிழா பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது என்பதை இதன்வாயிலாகப் பேரறிவிப்பு செய்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

holiday naam thamizhar katchi seeman thaipusam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe