Advertisment

பா.ஜ.க. கூட்டணியில் இழுபறி; “நல்ல பதில் வரும்” - ஓ.பி.எஸ். நம்பிக்கை!

Tension in BJP alliance; “A good answer will come” - O.P.S. Hope

Advertisment

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும் இன்று (20.03.2024) ஒதுக்கீடுசெய்யப்பட்டது. அதே சமயம் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அணியுடன் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஜி.கே. வாசன், ஓபிஎஸ் கேட்கும் சில தொகுதிகளை ஒதுக்க பா.ஜ.க. முன்வராததால் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக பாஜக தேர்தல் பணிக் குழுவினரோடு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நீண்ட ஆரோக்கியமான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாளை (21.03.2024) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நல்லதொரு முடிவினை எடுத்து அதற்கான முடிவை அறிவிப்போம். நாளைக்கு நல்ல பதில் வரும்” எனத் தெரிவித்தார். மேலும் பா.ஜ.க. கூட்டணியில் தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கும், பாரிவேந்தரின் இதிய ஜனநாயக கட்சிக்கும், புதிய நீதிக்கட்சிக்கும் தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 இடங்கள் நேற்று முன் தினம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Alliance
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe