Skip to main content

4000 பேருந்துகளுக்கான டெண்டர்; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Tender for 4000 buses; Minister Sivashankar's announcement

 

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழக்கு ஒன்றிற்காகக் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணைக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “போக்குவரத்துத் துறையில் புதிய பணியிடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சர் ஆணையிட்டு அரசாணை வெளி வந்துள்ளது. முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும், கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும் பணியிடம் நிரப்பப்பட இருக்கிறது. அதன் பிறகு 6 அரசு போக்குவரத்து கழகங்களிலும் படிப்படியாக பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பாஸ் வழங்குவது கொரோனா நேரத்தில் தாமதமாக வழங்கப்பட்டது. இந்த கல்வி ஆண்டில் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு பாஸ் வழங்கப்படும்.

 

புதிய பேருந்துகளில் 400 தாழ் தளப் பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு அது இறுதி செய்யப்பட இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் வழக்கமான பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் படிப்படியாக 4 ஆயிரம் பேருந்துகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டு விரைவில் புதிய பேருந்துகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும். அரசு வாகனங்களை 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு சொல்லியிருக்கிறது. அதில் பேருந்துகளும் அடக்கம். இந்திய ஒன்றியத்தில் அதிக பேருந்துகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

 

21 ஆயிரம் பேருந்துகள் இருக்கிறது. அதில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளை கடந்த பேருந்துகளாக இருக்கிறது. இருந்தாலும் 2 ஆண்டு கொரோனா காலத்தில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. எனவே கொரோனா காலத்தை கணக்கில் கொண்டு காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் நான் சொல்லியுள்ளேன். அவர் பிரதமரிடம் ஆலோசித்துவிட்டு சொல்வதாக சொல்லியுள்ளார். புதிய பேருந்துகள் வாங்கும் வரை பழைய பேருந்துகள் செயலில் இருக்கும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.