ADVERTISEMENT

“உதவி தேவை என்றால் சொல்லுங்கள்; முதல்வருடன் வர தயார்..” மு.க. ஸ்டாலின்  

02:14 PM Feb 05, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏழு பேரின் வழக்கில், முதன் முதலில் நளினியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தவர் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர். அதுவும் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே செய்தார். குறிப்பாகச் சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டிற்குள், இந்த தண்டனைக் குறைப்பைப் பெற்றுக் கொடுத்தது தி.மு.க. ஆட்சி என்பது கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்கே தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அதில்,


“பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தி.மு.க. அரசியல் நாடகம் நடத்துகிறது” என்று தமிழகச் சட்டமன்றத்தில் கூறி - 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருப்பதுடன், மெகா பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன், “இவர்களின் தண்டனையைக் குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று இதே சட்டமன்றத்தில் பேசியவர்தான் மறைந்த ஜெயலலிதா. இந்த ஏழு பேரின் விடுதலையில் எவ்வித அக்கறையும் இல்லாமல், அரசியல் நோக்கில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி – மொத்த விவகாரத்தையும் குழப்பி - தமிழகச் சட்டமன்றத்தில் இவர்களை எல்லாம் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றியும் - இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்று வரை விடுதலையைப் பெற்றுக் கொடுக்காமல் - 10 ஆண்டு காலமாக தொடர் நாடகம் போட்டு வரும் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான்.

ஏழு பேர் விடுதலையிலும் தேர்தலுக்குத் தேர்தல் நாடகம் போடுவதை - வேடம் கட்டுவதை முதலில் கைவிடுங்கள்! இப்போது ஆளுநர் “எனக்கு அதிகாரம் இல்லை” எனக் கூறி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார்.

அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் நகமும் சதையும் போல் கூட்டணியாக இருக்கின்றன. 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுகிறார்கள். ஆகவே பா.ஜ.க.வும் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து - தொகுதிப் பங்கீட்டை முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கும் முன்பு, ஒரு நிபந்தனையாக, “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்” என மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். கடந்த மூன்று தேர்தல்களில் நடத்திய அந்தப் பழைய நாடகத்தையே - இந்தத் தேர்தலிலும் நடத்தாமல் - ஏழு பேர் விடுதலைக்கு, வஞ்சக எண்ணம் இல்லாமல், இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் உதவி தேவை என்றால் சொல்லுங்கள். நாளைக்கே குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதலமைச்சர் சென்றாலும் உடன் வரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT