ADVERTISEMENT

'இதை செய்யத் தவறினால் அடுத்தமுறை 25 சீட்டுகூட கிடைக்காது' - ப.சிதம்பரம் பேச்சு 

12:02 PM Mar 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பல நாட்களாக திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக தனித்தனியே காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டதற்கு பிறகு, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உள்ளிட்ட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 'திமுக குறைந்த அளவில் சீட்டுகளை ஒதுக்குவதைவிட நம்மை நடத்தும் விதம்தான்...' என நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டது பேசுபொருளானது. ஒருவழியாக தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு நடந்து முடிந்து, நேற்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இன்று 25 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 'கட்சி என்றால் கடமையுடன் செயல்பட வேண்டும். இல்லாவிடில் அடுத்த முறை 25 சீட்டு கூட கிடைக்காது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை. காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா? காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமை கட்சிகளை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டும்' என பேசியுள்ளார். ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி, கடந்த காலங்களில் 60 சீட் தந்தும் சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணிக் கட்சிக்கு இடம் ஒதுக்குவதைக் கணிப்பார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT