Advertisment

“தமிழ்த்தாய் வாழ்த்தை நான் முழுமையாக பாடுவேன் என்று முதல்வருக்கு தெரியும்” - தமிழக ஆளுநர்

Tamilnadu governor RN ravi replied to CM Mk stalin for tamil thai valthu controversy

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

Advertisment

இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின விழா இன்று (18-10-24) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று பேசினார். இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் உள்பட அனைவரும், எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘திராவிடம்’ என்ற வார்த்தையை பாடாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தையை சரியாக பாடாமல் அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்று பாடினர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், தமிழ்த்தாய் குளறுபடி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe