Skip to main content

பணம் எப்போ வரும்? ரேஷன் கார்டுக்கு ரூபாய் 1000... யாருக்கு எப்போது கிடைக்கும்?

21 நாட்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தால் ஏழை-எளிய அன்றாட உழைப்பாளிகளின் வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளக்காரர்களின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்காக ஒரு குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஊரடங்கு நேரத்தில் 'இந்தத் தொகை எப்படி வழங்கப்படும்?' என்கிற கேள்வி எழுந்தது.

முதல்வரின் அறிவிப்பு வெளியானதுமே, சமூக வலைதளங்களில் ரேசன் கடைகளில் கூட்டத்திற்கு நடுவே நின்று 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொள்வது போன்று படங்கள் வெளியாக, பொதுமக்கள் உடனே ரேசன் கடைகளுக்கு சென்று, 'பணம் எப்போ வரும்? பணம் எப்போ வரும்?' என்று கேட்க ஆரம்பித்தனர். இதுக்காகவே கூட்டம் திரள்வதால் பலரிடையே அச்சமும் நிலவியுள்ளது. ''ஏப்ரல் முதல் தேதிக்கு பிறகுதான் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்'' என்று பல ரேசன் கடைகளில் சொல்லி வந்தார்கள். ஏப்ரல் 2ஆம் தேதி வழங்கப்படும் என்று சில இடங்களில் சொல்லி வந்தார்கள்.

 

ration shopஇதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "கரோனா வைரஸினால் பொதுமக்கள் தனித்தனியே இடைவெளி விட்டு நின்று பணமும், பொருளும் வாங்கிச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் கொடுத்து பொருளும் வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

மார்ச் மாத பொருட்களை ரேசன் கடைகளில் வாங்காமல் இருந்தால், பணம் கொடுத்து தற்போது வாங்கிக்கொள்ளலாம்.

அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் சிவில்சப்ளை இணையதளத்தில் அல்லது செயலியில் வாங்க விரும்பவில்லை என்று பதிவு செய்யலாம்.

அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களும் பொதுமக்களுக்கு நிதியுதவியை முறையாக விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்கள்.இந்நிலையில், கூட்டுறவுத்துறை 26.3.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ரேசன் கார்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் அறிவிப்பு ஆறுதலைத் தருகிறது. அவர் கூறியுள்ள தகவலில், ''ஒவ்வொரு நியாயவிலைக் கடை ஊழியர் மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே ஆவணங்களுடன் நேரடியாக சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தினை தருவார்கள். அதனை அவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். இதனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டதும் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.

அதேபோல் நியாய விலைக்கடையில் அனைவருக்கும் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை எப்போது வேண்டுமானாலும் சென்று வாங்கலாம், கூட்டமாக இருக்கும்போது கடைக்கு செல்லாமல் இருக்கலாம். அரசு பின்பற்றக் கூறிய இடைவெளியில் நிற்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, இந்த ஆயிரம் ரூபாய் போதாது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு நிவாரணமாக பொதுமக்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த, அடுத்த சில மணி நேரத்தில் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார். 31ஆம் தேதி வரையிலான வேலை நிறுத்தத்துக்கே, ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்று வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த எளிய மக்கள் புலம்பித் தவித்துக் கொண்டிருக்கையில், 21 நாட்கள் வேலையில்லாமல் முடங்கிக்கிடந்தால் அதுக்கு ஆயிரம் ரூபாய் எல்லாம் எம்மாத்திரம்? இதில் உள்ள சிக்கலை அரசு உணர வேண்டும். ஊரடங்கினால் எளிய மக்களின் பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப நிதியுதவியை உயர்த்தி தர வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

தற்போதைய நிலையில், முதல் கட்டமாக 1000 ரூபாயை ஒவ்வொரு ரேஷன் கடையிலும் நூறு, நூறு பேருக்காகத் தரும்போது, பாதிப்படைந்தவர்களில் ஒரு சிலருக்கு முன்கூட்டியும், ஒருசிலருக்கு கடைசியாகவும் கிடைக்கக் கூடிய நிலை உள்ளது.

ஏப்ரல் 2ல் தொடங்கி 15 வரையிலான பண விநியோகத்தில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் என்பது தெரியாத நிலையில், மக்கள் பொறுத்திருந்து தங்களுக்கான தொகையைப் பெறவேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இதற்கிடையே, கேஸ் மானியத்தை விட்டுக்கொடுப்பவர்கள் தாங்களாக முன்வந்து அறிவிக்கச் சொன்ன மத்திய அரசு போல, மாநில அரசும் தற்போதைய நிதி நெருக்கடி நிலையில், ரேஷன் கார்டுக்கான 1000 ரூபாயை விட்டுக் கொடுக்க நினைப்பவர்கள் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்