“கையெழுத்து பிரச்சாரத்தை பார்த்து பயப்படுகிறார்கள்” - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Tamilisai Soundararajan says They are afraid of the handwritten campaign

மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் சென்னையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கையெழுத்து பெறவும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் இன்று (06.03.2025) ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்கு வந்த போலீசார் அனுமதி வாங்காமல் கையெழுத்து போராட்டம் நடத்தக்கூடாது எனத் தெரிவித்தனர். போலீசார் தமிழிசை சௌந்தரராஜனிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே தமிழிசை சௌந்தரராஜன், “மக்களிடம் தங்களுடைய கோரிக்கையை எடுத்து வைத்து மும்மொழிக் கொள்கை தேவை என்பது குறித்து கையெழுத்து வாங்க இருக்கிறோம். பொதுமக்கள் பார்வையில் நாங்கள் செய்வது கரெக்ட் சார். பாமர மக்களுக்கு மூன்று மொழி சொல்லிக் கொடுங்கள் என மிகவும் பொறுமையாக ரொம்ப அமைதியா கேட்க வந்திருக்கிறோம். நீங்கள் செய்வதைச் செய்து கொள்ளுங்கள். பொது மக்களைப் பார்ப்பது தவறா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் போலீசார் தொடர்ந்து அவரை தடுத்தனர். இதனால் பாஜகவினர், போலீசாருக்கு எதிராகக் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “காவல்துறையினர் என்னைக் கையெழுத்து வாங்க அனுமதிக்கவில்லை. நீங்கள் அதைச் செய்ய முடியாது என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதற்கு நான் சொன்னேன் இது ஊர்வலமோ, போராட்டமோ அல்ல என்று. இது ஒரு அமைதியான கையெழுத்து இயக்கம். 30 முதல் 40 காவலர்கள் என்னைச் சூழ்ந்து இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

காவல்துறையினர் என்னைக் கையொப்பம் பெறவோ அல்லது அங்கிருந்து இடம் மாறி செல்லவோ அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் 3 முதல் 4 மணி நேரம் கழித்து அவர்கள் என்னை அனுமதித்தபோதுதான், எனக்குக் கையொப்பங்கள் கிடைத்தன. இந்த கையெழுத்து பிரச்சாரத்தைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை நான் பாராட்ட வேண்டும். காவல்துறை அனுமதித்தவுடன், மக்கள் முன்வந்து தங்கள் கையொப்பங்களை வழங்கினர்” எனத் தெரிவித்தார்.

Chennai police
இதையும் படியுங்கள்
Subscribe