Tamilisai Soundararajan says No faith in the state govt

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்திம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்நிலையில் தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் சென்னை தியகராயர் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (08.01.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜவின் முக்கிய நிர்வாகிகள், மேலிட பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌவுந்திரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாநில அரசு மீது நம்பிக்கையில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

Advertisment

அதனால் தான் உயர் விசாரணை அமைப்பான சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென பா.ஜ.க. சார்பில் கேட்டுக்கொள்கிறோம். சட்ட ஒழுங்கை பொருத்தமட்டில் குற்றவாளிகள் எல்லாம் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் செய்யும் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். இப்படிப்பட்ட அடக்குமுறையான சூழ்நிலை நிலவுகிறது. எனவே திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் நம்பிக்கை இல்லை என்பதை வலிமையாகப் பதிவு செய்து கொள்கிறோம். பாஜகவின் மாநில மைய குழுக் கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் இதனைப் பதிவு செய்தோம்” எனத் தெரிவித்தார்.