“முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்களா...” - தமிழிசை செளந்தரராஜன்

Tamilisai Soundararajan questioned Do chief ministers give respect to governors?

பஞ்சாப் மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்துவதாக, பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது. அரசு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதித்து வருகிறார். மாநில சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். கடந்த முறை பஞ்சாப் சட்டப்பேரவை கூடியபோது நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை.

இது தொடர்பான வழக்கு கடந்த 6 ஆம் தேதி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பிரச்சனையில் நீதிமன்றத் தலையீட்டைக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளன. ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா?இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருமுறைதான் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மாநில அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும். மேலும், மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து இன்று (10-11-23) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதற்கிடையே, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் உச்சநீதிமன்றம் கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “ஆளுநர்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்பதே கேள்வியாக இருக்கிறது. ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் 167இன் படி சட்ட மசோதாக்கள் குறித்து ஆளுநரை முதல்வர் சந்தித்து அந்த சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. அதனால், முதலமைச்சர்கள் ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்களா? என்பதையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

governor
இதையும் படியுங்கள்
Subscribe