Advertisment

''மிரட்டும் தொனியில் பேட்டி...'' அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கண்டனம்!

Tamil News Anchor Varatharajan - C. Vijayabaskar

Advertisment

“நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது. மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்குச்செல்ல, முயற்சித்தபோது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை, இங்கு அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்தது.

மருத்துவமனைகளின் ஓனர், எம்டி என அனைவரிடம் பேசினாலும் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அவருக்கு எப்படிகரோனா வந்தது என்றே தெரிவில்லை, காரணம் அவர் மிகவும் டிஸிபிலிண்டானவர். அதன் காரணமாக நமக்கெல்லாம் கரோனா வராது என்று நம்பிக்கையில் வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் செல்லுங்கள். அப்பொழுதும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அரசின் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்” என நடிகரும் பிரபல செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “செய்தி வாசிப்பாளர் வரதராஜன் குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை. தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாட்டைக் குற்றம் சொல்வதில் வரதராஜனுக்கு என்ன சந்தோஷம். எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன என்று வரதராஜன் தெளிவுபடுத்த வேண்டும்.

Advertisment

தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்றால் அதை நிரூபிக்க செய்தியாளர் வரதராஜனை என்னுடன் நேரடியாக மருத்துவமனைக்கு வரச் சொல்லுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன்? பாராட்டவில்லை என்றாலும் செய்தியாளர் வரதராஜன் தவறான தகவலைபரப்பக்கூடாது.

செய்தியாளர் வரதராஜன் மீது தவறான தகவல் பரப்பியதாக நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவும் காலத்தில் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டுள்ளார். அவர் எந்த அரசு செயலரைதொடர்புகொண்டார் எனத் தெரிவிக்க வேண்டும். பெருந்தொற்று நோய் தொற்று சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.

வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தமிழ்செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடி செய்தி வாசிப்பாளர்களில் ஒருவரும், மிகச் சிறந்த நாடக கலைஞரும், தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவருமான வரதராஜன் கரோனா பாதிப்பு குறித்து தனது சொந்த அனுபவத்தை வீடியோ மூலம் பதிவு செய்திருந்தார். அதில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ பதிவு என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகவும், உறவினரை மருத்துவமனையில் சேர்க்க இயலாமல் போனதையும் கூறியிருந்தார். அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு கரோனா தொற்று அதிகரித்து வரும நிலையில், வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும், வெளியே சென்று தொற்று ஏற்பட்டால் சிகிச்சை பெறுவது சிரமம் ஆகிவிடும் என்ற எண்ணம் மட்டுமே ஏற்படும்.

nakkheeran app

ஆனால், அந்த வீடியோ தவறானது என்றும் திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாகவும் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதாக இல்லை என்று செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கருதுகிறது.

வரதராஜன் தமக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வது எப்படி வதந்தியாகும். தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும், பல்வேறு தரப்பினரும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரதராஜன் மீது தொற்று நோய் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தொனியில் அமைச்சர் பேட்டி அளித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் என்று கருதி செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்டம் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகத்தில் நற்பெயருடன் விளங்கி வரும் வரதராஜன் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழக முதல்வர் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

actor C. Vijayabaskar corona virus issue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe