Tamil Nadu Government should give extra salary to those who in corona duty

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையின் வேகம் மிக தீவிரமாக இருந்துவருகிறது. அதன் தாக்கம் தமிழகத்திலும் இருந்துவருகிறது. தினசரி கரோனா தொற்று பாதித்தவரக்ளின் எண்ணிக்கை கூடுவதுபோலவே,. தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது. சில இடங்களில் மருத்துவர்களும் செவிலியர்களுமேகூட கரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அதேபோல் கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக சில மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் அதிக நேரம் பணி செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை முன்களப் பணியாளர்கள் உயிரிழப்பதாக வெளியாகிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மருத்துவத்துறை பணியாளர்களின் தியாகம் அளவிட முடியாதது. அவர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கங்கள்.

Advertisment

கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் இருந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 54,896 மட்டும்தான். ஆனால், இன்றைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1.52 லட்சத்தைக் கடந்துவிட்டது. இவர்களில் பெரும்பான்மையினர்அரசு மருத்துவமனைகளிலும், அரசு கோவிட் மையங்களிலும்தான் மருத்துவம் பெற்று வருகின்றனர்.

கரோனாவுக்காக மருத்துவம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. இருக்கும் மருத்துவர்கள்தான் அனைவருக்கும் மருத்துவம் அளிக்க வேண்டி உள்ளது. அதனால் அவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, பல நாட்களில் பணி நேரத்தைவிட கூடுதலாக மருத்துவர்களும்செவிலியர்களும் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை பரவியபோது, இரு வாரம் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஒருவாரம் ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அத்தகைய ஓய்வு அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த முறை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் ஒருமாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்பட்டது. ஆனால், இந்தமுறை அத்தகைய சிறப்பு ஊதியம் வழங்கப்படாமல், பணிச்சுமையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் தியாக உணர்வுடன் கூடியஅர்ப்பணிப்பான சேவைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதற்காக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி முடிக்கும்வரை, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். பணியின்போது உயிர்த்தியாகம் செய்த மருத்துவப் பணியாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 50 லட்சம் நிதியுதவியை தாமதமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இவை அனைத்தையும்விட, மருத்துவத்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க அரசு முன்வர வேண்டும்.

இவை தவிர மருத்துவர்களின் நிறைவேற்றப்படாத முக்கியமான கோரிக்கை ஒன்று உள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கும், மாநில அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கும் இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை ஆகும். 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்கநிலை ஊதியம் ரூ. 56,100 என்ற ஒரே அளவுதான். ஆனால், ஐந்தாவது ஆண்டிலிருந்து இந்த ஊதியம் மாறுபடத் தொடங்குகிறது. இதற்குக் காரணம் மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும்பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படுவதுதான்.

இதனால் 14ஆம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20ஆவது ஆண்டில்தான் பெறுகின்றனர்; 14ஆவது ஆண்டில் அவர்களுக்கு ரூ. 86,000 மட்டுமே கிடைக்கிறது. மாநில அரசு மருத்துவர்கள் அவர்களின் 14ஆவது ஆண்டு பணிக்காலத்தில் தொடங்கி,பணி ஓய்வு பெறும்வரை, மத்திய அரசு மருத்துவர்களைவிட ரூ. 45,000 வரை குறைவான ஊதியம்பெற வேண்டியிருக்கிறது. உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடும் மருத்துவர்களுக்கு இதைவிட மோசமான அநீதியை இழைக்க முடியாது.

தமிழக அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை களைய வேண்டும் என்று கடந்த மூன்றரை ஆண்டுகளில் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். மருத்துவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மதுரை உயர் நீதிமன்றக் கிளையும் ஆணையிட்டது; மருத்துவர்களும் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனினும், இவற்றை மனதில் கொள்ளாமல் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

மருத்துவர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில்கொண்டு, தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.