Advertisment

ஏழை மக்களின் வேதனைகளை ஏன் தமிழக மின்சாரத்துறை புரிந்து கொள்ள மறுக்கிறது? ஈஸ்வரன் கண்டனம்

E.R.Eswaran

Advertisment

ஏழை மக்களின் வேதனைகளை ஏன் தமிழக மின்சாரத்துறை புரிந்து கொள்ள மறுக்கிறது என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 21ஆம் தேதி திமுக நடத்தும் போராட்டத்தில் கொமதேகவும் பங்கேற்கும் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டணம் வசூலிப்பதில் மக்களை கட்டாயப்படுத்துவதையும், அதிகமான கட்டண வசூல் செய்வதையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வன்மையாக எதிர்க்கிறது. 21-ஆம் தேதி திமுக நடத்தும் போராட்டத்தில் கொமதேகவும் பங்கேற்கும். கறுப்பு கொடி போராட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் பொதுமக்களையும் இணைத்து நடத்த வேண்டுகிறேன்.

கொரோனா பாதிப்பிற்காக அரசாங்கம் ஊரடங்கு அமல்படுத்திய நாளிலிருந்தே ஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணம் வாங்க கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி வந்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளை விட்டு வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்த போதே மின்சார கட்டணம் கட்ட வேண்டியது இல்லை என்று அறிவித்திருக்க வேண்டும்.

Advertisment

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளில் இருந்தனால் தான் மின் கட்டணம் அதிகமாகி இருக்கிறது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. மக்கள் வீடுகளில் இருந்ததால் மின் உபயோகம் அதிகமாகி இருக்கிறது என்று புரிந்து கொண்ட மின்சார வாரியம் வேலைகளுக்கு போகாமல் வீடுகளில் இருந்த மக்களுக்கு வருமானம் இல்லை என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

சாதாரண நாட்களில் வருகின்ற மின்கட்டணத்தையே கடைநிலையில் இருக்கின்ற ஏழை எளிய மக்கள் மாதம் மாதம் செலுத்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது வருமானமே இல்லாமல் மின்கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தினால் என்ன செய்வார்கள் என்று புரிய வேண்டாமா. அரசினுடைய வருமானத்தை நோக்கமாக கொண்டு நோய் பரவினாலும் பரவாயில்லை என்று டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசு, மக்கள் எவ்வளவு வேதனைக்குள்ளானாலும் பரவாயில்லை என்று மின்சார வாரியத்தின் வருமானத்தை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள்.

ஏழை மக்களின் வேதனைகளை ஏன் தமிழக மின்சாரத்துறை புரிந்து கொள்ள மறுக்கிறது. அதேபோல சிறு, குறு தொழிற்சாலைகளுடைய மாதம் மாதம் கட்டக்கூடிய நிரந்தர கட்டணத்தை தொழிற்சாலைகளை மூடிவிட்டு எப்படி கட்ட முடியும். செயல்படாமல் இருந்த பல சிறு, குறு தொழிற்சாலைகள் இனிமேல் நடத்த முடியாது என்ற நிலைக்கு வந்து மூடப்படுகின்ற தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசின் கட்டாய மின்கட்டணம் தான் காரணமாகி இருக்கிறது.

தாய் உள்ளத்தோடு மின்கட்டணம் வேண்டாம் என்று சொல்ல வேண்டிய தமிழக அரசு கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்கிறோம் என்று சொன்னது நியாயமா ?. தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து கட்டாயப்படுத்தினால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலையிழப்பு ஏற்பட்டு வீட்டு மின்கட்டணமும் செலுத்த முடியாமல் பலர் தற்கொலைகள் செய்து கொள்ள நேரிடும். விவசாயிகளுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதே இலவச மின்சாரம் தான். விவசாயிகளின் உயிர்நாடியாக இருக்கின்ற இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயலும் மத்திய அரசுக்கு துணைப்போகின்ற மாநில அரசின் நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியது.

திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்திலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இந்த கருத்துக்களை வலியுறுத்தியது. தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்து வந்தாலும் தமிழக அரசும் மின்சாரத்துறையும் அதற்கு செவிசாய்க்கவில்லை. சாமானிய மக்களுடைய எதிர்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் நேரம் தமிழக அரசுக்கு வரும். மக்களுடைய எதிர்ப்பை கறுப்பு கொடி போராட்டத்தின் மூலமாக அமைதியான முறையில் தெரிவிப்பதை தவிர வேறு வழி கிடையாது. தமிழக மின்சாரத்துறை சாமானிய மக்களுடைய உண்மைநிலையை புரிந்து கொண்டு ஊரடங்கு காலத்திற்கான மின்கட்டண வசூலை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்.

இன்றைக்கு எல்லோரையும் உயிரோடு வாழவிடுவது தான் முக்கியம். அரசினுடைய வருமானம் முக்கியமில்லை. திராவிட முன்னேற்ற கழகம் நடத்தும் கறுப்பு கொடி போராட்டத்தில் இணைத்து கொண்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்திருக்கிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆங்காங்கே அமைதியான முறையில் கறுப்பு கொடி போராட்டத்தை திமுகவோடு இணைந்து முன்னெடுக்க அழைக்கின்றேன். அனைத்து பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசினுடைய பார்வை சாமானிய மக்கள் மீது பட்டு மின்சார கட்டணத்தில் இருந்து விடுதலை பெற ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

issue EB bill E.R.Eswaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe