Advertisment

‘ஜூன் 4ஆம் தேதியன்று முகவர் செய்ய வேண்டியவை’ - தமிழக முதல்வர் அறிவுறுத்தல்

Tamil Nadu Chief Minister's instruction What agents should do on June 4

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாகமக்களவைத் தேர்தல் நடைபெற்று இன்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது.

Advertisment

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பதைத்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில், ‘வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தபால் வாக்குகள் இரண்டு வகைப்படும். 1. ETPBS, 2. சாதாரண தபால் வாக்கு. அதற்குரிய வழிமுறைகள் உங்களுக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றிச் செல்லாத வாக்குகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க வாக்குகளைச் செல்லாததாகவும் அறிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

Advertisment

எப்படி இ.வி.எம் வாக்குகள் முக்கியமோ, தபால் வாக்குகளும் மிக முக்கியமானவை. எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகளில் மட்டும்தான் துவங்க வேண்டும். முதல் அரை மணி நேரம் கழித்துத்தான் இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கையை என்ன காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் துரிதமாக எண்ணி அதனுடைய முடிவுகளைத் தருவதை உறுதிசெய்ய வேண்டும். இ.வி.எம் இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பாக அந்த இ.வி.எம் இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இயந்திரங்களின் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்த பிறகு, இயந்திரத்தின் எண்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் படிவம் 17C-இல் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

17C படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் இ.வி.எம் இயந்திரத்திலும் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிறகு, வாக்குப் பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிவுற்ற நேரத்தை இ.வி.எம் இயந்திரத்தில் பார்த்து, சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றில் சீல்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயந்திர எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ, பதிவான வாக்குகள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, வாக்குப் பதிவு நேரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலோ, வாக்கு எண்ணிக்கைக்கு அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர்கள் குறிப்பாக RO Table-க்கு செல்லும் வாக்கு எண்ணிக்கை முகவர் இதுகுறித்த கையேடுகளையும், சட்டங்களையும் அறிந்தவராக இருத்தல் நலம்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டமன்றத்தொகுதிக்கு ஐந்து வி.வி.பேட் இயந்திரங்களை எடுத்து அதில் உள்ள காகித வாக்குகளை எண்ணி, இ.வி.எம் இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். படிவம் 17C-இல் நிரப்பப்படும் வாக்குகள் சரியாக படிவம் 20-இல் எழுதப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். படிவம் 20-இல் எழுதப்பட்ட வாக்குகள் மொத்த வாக்குகளாக எண்ணப்படும்போது அல்லது கூட்டப்படும்போது அந்த எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, படிவம் 20-இல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe