Advertisment

தமிழச்சி vs தமிழிசை; அனல் பறக்கும் தென்சென்னை!

Tamil Nadu BJP Announcement of Candidates

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

Advertisment

இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) வெளியிட்டது.

Advertisment

இந்நிலையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைவெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

முன்னதாக தென்சென்னை தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டிருந்தார். பாஜகவின் இந்த அறிவிப்பின் மூலம்தென்சென்னை தொகுதி தமிழச்சி vs தமிழிசை என அனல் பறக்க தொடங்கியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தனது பதவியை ராஜினாமா செய்து அண்மையில் பாஜகவில்இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Candidate
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe