/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttvd 21_1.jpg)
கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான வெற்றிவேல் கடந்த அக்டோபர் மாதம் காலமானார்.
இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளரும், வெற்றிவேலின் நெருக்கிய நண்பருமான டிடிவி தினகரன், வெற்றிவேலின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வெற்றிவேல் மறைந்தபோது டிடிவி தினகரன் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், ''அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான வெற்றிவேல் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன்.
மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர்.
என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிப்படச் சொல்லி, இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttvd 22.jpg)
துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப்போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர்.
'வெற்றி... வெற்றி' என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிறபோதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது.
வெற்றிவேலின் மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சியப் பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
Follow Us