/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3333_3.jpg)
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா உள்ளார். இந்த நிலையில் சிறையிலுள்ள சசிகலா 2021, ஜனவரி 27-ல் விடுதலையாவார். மேலும், அபராதத் தொகையான ரூ.10 கோடியை அவர் நிச்சயம் செலுத்த வேண்டும், ஒருவேளை செலுத்தத் தவறினால், விடுதலையாவது ஓராண்டு தள்ளிப்போகும் என்று ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்தது. இதனிடையே சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் அமமுகவினர் செப்டம்பர் மாதத்திலேயே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
சசிகலா இந்த மாதமே வந்துவிடுவார் என்று தகவல்கள் வெளியான நேரத்தில் கடந்த 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, "சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், அவர் வந்ததற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கிறாரோ அதனைப் பொறுத்துத்தான் அரசியலில் தாக்கம் இருக்கும்" என்றார். அன்றைய தினமே சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் சசிகலா விடுதலை குறித்தும் காரசாரமாக பேசப்பட்டது.
அங்கு பேசப்பட்ட விவரங்கள் தினகரனுக்கு சிலர் சொல்லியுள்ளனர். சசிகலா வெளியே வரும் நிலையில் அதிமுக தலைமையில் உள்ளவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட தினகரன், செப். 20 ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்றுள்ளார். தினகரனின் டெல்லி பயணம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரித்தபோது, சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதற்கு மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை செய்வதற்காக சென்றுள்ளார் என்றும் முன்கூட்டியே விடுதலையாவதற்கு என்னென்ன வாய்ப்பு இருக்கிறது. அபராதத் தொகையை கட்ட வேண்டிய வழிமுறைகள் என்ன? என விரிவான ஆலோசனை நடத்தவே டெல்லி சென்றார் என்றும், இந்த பயணத்தின் போது பாஜகவைச் சேர்ந்த சிலரை சந்திக்கவும் சென்றார் என்றும் கூறப்படுகிறது.
பாஜகவினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, பாஜக ஆதரவு தொழிலதிபர்களை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க விரும்பினார். இதையடுத்து அவரை ரகசியமாக சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் தினகரனிடம், தேர்தல் தொடர்பாகவும், அதிமுக அணிகளைஇணைப்பது குறித்தும் சில விஷயங்களை சொல்லியுள்ளனர். தினகரனும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அப்போது, நாங்கள் சொன்னதை செய்யுங்கள், சசிகலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்என்று பாஜக தலைவர்கள் சொல்லியுள்ளனராம். டெல்லிப் பயணம் முடிந்த நேற்று இரவே சென்னை திரும்பியுள்ளார் தினகரன். டெல்லியில் நடந்த விஷயங்கள்சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.
இதுபற்றி அமமுகவினர் சிலரிடம் பேசியபோது, டெல்லி சென்ற டிடிவி தினகரன் பாஜக தலைவர்களை சந்தித்தாரா என்பது எங்களுக்கு தெரியாது. சசிகலா இந்த மாதத்தில் வந்துவிடுவார் என்று எங்கள் வழக்கறிஞர்கள் சொல்லுகிறார்கள்.சசிகலா வந்தால் அரசியலில் தாக்கம் இருக்கும். அதிமுகவில் பதவில் இருப்பவர்கள் பலர் சசிகலாவை சந்திப்பார்கள் என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)