ADVERTISEMENT

“ரகசிய சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல; பூதம்” - சு.வெங்கடேசன் எம்.பி

12:50 PM Mar 15, 2024 | ArunPrakash

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.

இந்த நிலையில் இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ரகசிய சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல… பூதம்; தேர்தல் பத்திரங்களில் 22 நிறுவனங்கள். ஒவ்வொன்றும் தந்திருப்பது 100 கோடிக்கு மேல். அமலாக்கத் துறையிடம் "சிக்கிய" ஒரு நிறுவனத்திடம் இருந்து 1368 கோடி. கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றவர்களின் கணக்கு இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT