ADVERTISEMENT

12 மணி நேர வேலை சட்டத்திருத்தம் நிறுத்திவைப்பு; முதலமைச்சர் அறிவிப்பு

07:04 PM Apr 24, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திய சட்ட மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று பிற்பகல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் அமைச்சர் எ.வ.வேலு, பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டம் இயற்றப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி சட்டம் எதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்பதையும் விளக்கினார். இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தற்போது தொழிலாளர்களுக்கு உள்ள பாதிப்புகள், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் தொழிலாளர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தெல்லாம் கூறினர். 8 மணி நேர வேலைத்திட்டத்தை நீர்த்துப்போகச் செய்து அனைவரும் 12 மணி நேர வேலை செய்ய கூடிய நிலை ஏற்படும் எனக்கூறி சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் முன் வைத்தனர்.

ஆலோசனை நிறைவு பெற்ற பின், தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறிய கருத்துகள் குறித்து அமைச்சர்கள் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து இது குறித்து தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், 12 மணி நேர வேலை நேர சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக அரசு எப்போதுமே தொழிலாளர்களின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக விளங்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT