
திமுக ஆட்சி அமைத்ததும் மாற்று கட்சியிலிருந்து பலர் திமுகவில் இணைந்தனர். அந்த வகையில் அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாநில துணை தலைவராக இருந்த விஷ்ணுபிரபு, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்த பொழுது, இவர் எஸ்.பி.வேலுமணி குறித்த சில தகவல்களையும் பகிர்ந்தார் எனச் சொல்லப்படுகிறது.
இவர் இன்று, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி செல்வநாகரத்தினத்திடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் அவர், எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளரான ஷர்மிளா பிரியா என்பவர் கேரளா மாநிலம் சோலையூர் காவல்நிலையத்தில் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை பல்வேறு விதங்களில் அழைத்து கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த விஷ்ணுபிரபு, “புகார் அளித்தவர் ஷர்மிளா பிரியா. இவர் யார் என்றால் நமக்கு தெரியாது. ஆனால், கேரளா ஆணைக்கட்டியில் இருக்குக்கூடிய அந்த பண்னை வீட்டுக்கு சொந்தக்காரர் என்பது மட்டும் தெரிகிறது. ஷர்மிளா பிரியா, யார் என்பது குறித்து விசாரணை நடத்தினால் பல்வேறு உண்மைகள் தெரிய வரும். வேலுமணி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்கள் என்னிடத்தில் இருக்கும் காரணத்தினால், என்னை தொடர்ந்து அச்சுறுத்தும் செயலில் வேலுமணியும் அவரது சகாக்களும் ஈடுபட்டுவருகின்றனர். அந்த ஆவணங்கள் எல்லாம் ஒரு இடத்தில் மட்டும் இருந்தால் ஆபத்து அதனால், என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் சுமார் ஒரு பத்து பேரிடம் இந்த ஆவணங்கள் பத்திரமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.