Skip to main content

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு; களத்தில் இறங்கும் மம்தாவின் முதற்கட்ட நடவடிக்கை 

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

support for wrestlers; Mamata's first step into the field

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ஓரிரு தினம் முன் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி தர மறுத்தது. டெல்லியின் முக்கியமான பகுதியான ஜந்தர் மந்தரில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் மல்யுத்த வீரர்கள் பேரணியாகச் சென்றது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் வேறு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே முன்பைவிட டெல்லி ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

தொடர்ந்து நேற்று மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர். மேலும் டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தனர். தொடர்ந்து நேற்று மாலை ஹரித்வாரில் குவிந்த அவர்களை விவசாய சங்கத்தினரும் மக்களும் சமாதானப்படுத்தினர். கடின உழைப்பால் கிடைத்த பதக்கங்களை கங்கையில் வீசினால், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பல பதக்கங்களையும் நாடு இழக்க வேண்டியிருக்கும். அதனால் பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். இதன் காரணமாக தங்களது முடிவை தற்போதைக்கு நிறுத்திய மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு 5 நாள் கெடு விதித்துள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “டெல்லியில் நமது மல்யுத்த வீரர்கள் தாக்கப்பட்டதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு முழு ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளேன். அவர்கள் நாட்டிற்காக பதக்கங்களை வென்றவர்கள். அந்த பதக்கங்கள் அவர்களது பெருமையின் குறியீடு. எங்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இது குறித்து பேசி, ஹஸ்ரா மோர் முதல் ரவீந்திர சரோபர் வரை விளையாட்டு வீரர்களுடன் பேரணி நடத்த வேண்டும் என கூறியுள்ளேன். மல்யுத்த வீரர்களின் சம்மேளனத் தலைவரை கைது செய்ய உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின் அவர் இன்று வரை கைது செய்யப்படவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயல்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்