ADVERTISEMENT

அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான்... சீமான் பேச்சு

08:23 AM May 16, 2019 | rajavel

ADVERTISEMENT

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் விஜயராகவன். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செஞ்சேரிமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

ADVERTISEMENT



அப்போது, தமிழகத்தில் அரசியல் என்பது மிக இழிவாக கற்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்சிகள் நிறுவனமாகிவிட்டன. வேட்பாளர்களை நேர்காணல் செய்து பலகோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கும் வியாபாரிகளாக மாறிவிட்டனர். வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி முதலீடு செய்கிறார் என்றால் மக்களுக்கு சேவை செய்ய வருகிறாரா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இதை தகர்த்து எறிந்து புதிய அரசியலை கொண்டு வராமல் நல்ல ஆட்சியை உருவாக்க முடியாது. வேட்பாளர்களோ, தலைவர்களோ வெற்றியை தீர்மானிப்பது இல்லை. வாக்களிக்கும் மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

எங்களை விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டுதான். காயப்படுத்தும் கற்கள் இல்லை. நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம் விமர்சனம் இல்லாமல் வளர முடியாது என்பதுதான். ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்கிறோம். ஆனால் தொடர்ச்சியாக தேர்தல் களத்தில் நமது உரிமையை விற்பது என்பது அவமானம் ஆகும். வாக்கை விற்கவில்லை, வாழ்க்கையை விற்கிறோம்.

தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை இல்லை. அடுத்த 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் சந்தை. தேர்தல் களத்தில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்ல ஒரு கட்சியாவது இருக்கிறதா? பணம் இருப்பவன்தான் அரசியல் செய்யமுடியும் என்ற நிலை இருக்கும்போது எப்படி நல்ல ஆட்சி நடக்கும்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் முதல் நாங்கள் பெற்ற வாக்குகளின் சதவீதம் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. பின்னுக்கு செல்லவில்லை. அ.தி.மு.க., தி.மு.க.வை வெல்ல முடியாது என்று கூறுகிறார்கள். வெல்ல முடியாத படை உலகத்திலேயே இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள்.

கல்வி சந்தை பொருளாக மாற்றப்பட்டு விட்டது. அறிவை வளர்க்கும் கூடம் இல்லை. வர்த்தக, வியாபார மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் நலனுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியில் கொள்ளையடிக்கிறார்கள். இது கொடுமை இல்லையா?.

ஊழல் நிறைந்த கட்சியான அ.தி.மு.க., தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நல்லது செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்கிறார்கள். ஏன் இருந்தபோது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT