தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதற்காக சந்திரபாபு நாயுடுவை மம்தா பானர்ஜி பாராட்டியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், மத்திய அரசு அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக ஏற்கமறுத்தது. மேலும், மத்திய பட்ஜெட்டிலும் ஆந்திர மாநில அரசு அதிருப்தியையே வெளிக்காட்டியது. இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டுஅமைச்சர்கள் மார்ச் 8ஆம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் கடிதத்தை மக்களவை செயலரிடம் வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளித்துள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் தெலுங்குதேசம் கட்சி அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகும் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த முடிவு நாட்டை பேரழிவில் இருந்து காப்பதற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் அடாவடிகள், பொருளாதார பேரிடர்கள் மற்றும் அரசியல் உறுதியற்ற நிலைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.