Skip to main content

மாணவனின் எதிர்காலம் பெற்றோர்களைவிட ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது: ராஜேந்திரபாலாஜி

Published on 08/09/2020 | Edited on 08/09/2020
k.t.rajendra balaji minister

 

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று தமிழக அரசின் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது. 

 

பின்னர் கே.டி.இராஜேந்திரபாலாஜி பேசுகையில், ஆசிரியர்களை கௌரவபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் பணி எப்பொழுதுமே பெருமை வாய்ந்த பணியாகும். குறிப்பாக கடவுளை மக்கள் எப்படி நேசித்தார்களோ அதற்கு அடுத்த படியாக ஆசிரியர்களை மதிப்பார்கள்.

 

காரணம் ஒரு மாணவனின் எதிர்காலம் பெற்றோர்களைவிட ஆசிரியர் கையில் தான் உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் நிலையான சொத்து கல்வி ஒன்றே. அதை சரியான காலகட்டத்தில் சரியாக வழங்க கூடிய பணி ஆசிரியர் பணியே.

 

தமிழகத்தில் கல்வி சிறந்து விளங்குவதற்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்ளை அறிவித்துள்ளார். கல்விப்பணியில் மாணவர்களுக்கு காணொளி காட்சிகள் மூலம் தரமான முறையில் வகுப்புகள் நடத்துதல், பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்தல், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு வழிகாட்டுதல், மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகள் மற்றும் பிறர்க்கு உதவும் எண்ணங்களை வளர்த்தல் ஆகிய பணிகளில் ஆசிரியர் சிறந்து விளங்கி வருகின்றனர். அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் திட்டம்? -'ஆவின்' நிர்வாகம் மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

aavin milk

 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் சார்பில் 5 வகையான புதிய பால் பொருட்களை தமிழக முதல்வர் அவர்கள் நேற்று (08.07.2020) அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் நான்கு பால் பொருட்கள் (மோர், லஸ்ஸி 2வகை, 90நாள் கெட்டுப் போகாத பால்) ஏற்கனவே வணிக சந்தையில் உள்ளவையே.

 

ஏற்கனவே பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டி அழகு பார்த்து விட்ட பிறகும் மீண்டும் புத்தாடை அணிவித்து அக்குழந்தை புதிதாக பிறந்திருப்பதாகக் கூறுவது போல் அமைந்திருக்கிறது தமிழக பால்வளத்துறையின் செயல்பாடுகள்.

 

இது போல்தான் ஏற்கனவே வணிகச் சந்தையில் இருந்த ஆவின் சிறிய பாக்கெட்டை (10 ரூபாய்) புதிதாக விற்பனைக்குக் கொண்டு வருவது போல் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு கொடுத்து மூக்குடைபட்டார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

 

அது போலவே தற்போதும் விற்பனையில் உள்ள லஸ்ஸி, மோர், 90நாட்கள் கெட்டுப் போகாத பால் போன்ற பால் பொருட்களுக்கு புத்தாடை அணிவித்து அவை புதிதாகப் பிறந்திருப்பதாகக் கூறி இந்தக் கரோனா பேரிடர் காலத்திலும் ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்பது போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே உருவாக்க முயன்றுள்ளனர். மேற்கண்ட பால் பொருட்கள் வணிகச் சந்தையில் ஏற்கனவே இருப்பதைத் தமிழக முதல்வருக்கு அது குறித்த உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினார்களா..? இல்லை திட்டமிட்டு மறைத்து விட்டனரா..? எனத் தெரியவில்லை.

 

மேலும் முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்துள்ள "ஆவின் டீ மேட் பால்" முற்றிலும் மக்களையும், வணிகர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

 

ஏனெனில் தற்போது விற்பனையில் உள்ள ஆவின் கொழுப்புச் சத்து, செரிவூட்டப்பட்ட பால் (கொழுப்பு சத்து 6.0% திடசத்து 9.0%) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 1லிட்டர் 51.00ரூபாய். அதுவே மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 1லிட்டர் 49.00ரூபாய் மட்டுமே.

 

ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆவின் டீ மேட் பால்" கொழுப்பு சத்து 6.5% திடசத்து 9.0% எனவும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 1லிட்டர் 60.00ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் 0.5% கொழுப்பு சத்தை மட்டும் அதிகரித்து விட்டு 1லிட்டருக்கு 9.00ரூபாய் முதல் 11.00ரூபாய் வரை அதிக விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

 

அதே சமயம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் பாலினை (1TS×2.66) 32.00 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அப்படியானால் 0.5TSக்கு 1.50வரை அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்யலாம்.

 

ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆவின் டீ மேட் பாலில்" ஏற்கனவே விற்பனையில் உள்ள கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலினை விட 0.5%மட்டும் (0.5TS-1.33) கூடுதலாக்கி விற்பனை விலையில் 1லிட்டருக்கு 11.00ரூபாய் வரை அதிகரித்திருப்பதைப் பார்க்கும் போது தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பால் விற்பனை விலையைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனரோ என்கிற பெருத்த சந்தேகம் எழுகிறது.

 

மேலும் சென்னை மாநகரில் உள்ள சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் ஆவின் டீ மேட் பாலினை அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கே பால் முகவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். சில இடங்களில் மட்டும் சில சலுகைகளை வழங்குகின்றனர். அப்படியானால் ஆவின் டீ மேட் பாலினை என்ன விலைக்கு ஆவின் நிர்வாகம் வழங்குகிறது என்கிற வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இது மக்களையும், பால் முகவர்களையும், சில்லறை வணிகர்களையும் ஏமாற்றி கொள்ளையடிக்கும் திட்டத்துடனே நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

http://onelink.to/nknapp

 

எனவே தமிழக அரசு புதிய வகை ஆவின் பாலிற்கு நியாயமான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட், மொத்த விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் விலையில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார். 

 

 

 

Next Story

பாலில் ஜவ்வரிசி, குளுக்கோஸ் கலப்படம்!!! ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்... -பால் முகவர்கள் சங்கம்

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
minister rajendra balaji

 

ஆவின் நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதால் பால்வளத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்வதோடு, ஆவின் அதிகாரிகள், ஊழியர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆவின் பாலகத்தில் தொடர்ந்து தண்ணீர் கலந்த பாலினை விற்பனை செய்ததாக நேற்று (24.06.2020) 8 பேர் கைது செய்யப்பட்டு, 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

 

ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணைகள், பால் கொள்முதல் நிலையங்கள், குளிரூட்டும் நிலையங்களில் பணியாற்றி வரும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் துணையோடு இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தரமான பாலினை வழங்க வேண்டிய அதிகாரிகள் துணையோடு இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியளிக்கிறது.

 

அதிலும் ஆவின் நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதால் தரமற்ற பாலினை கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்த பாலை திருட்டுத்தனமாக விற்பனை செய்து விட்டு அதற்கு ஈடாக தண்ணீர், சோயா பவுடர், ஜவ்வரிசி, குளுக்கோஸ் போன்றவற்றை கலப்படம் செய்து ஈடுகட்டுவது, அதற்கு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர் வரை ஆதரவு இருப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது.

 

மேலும் ஏற்கனவே மதுரை ஒன்றியம், நெல்லை ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதன் காரணமாக பல லட்ச ரூபாய் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், மேற்கண்ட முறைகேடுகள் காரணமாக பல கோடி ரூபாய் வரை ஆவின் நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது.

 

எனவே இந்நிலை மாறிடவும், ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை களைந்திடவும் வேண்டுமானால், பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

 

ஆவின் பால் பண்ணைகள், பால் கொள்முதல் நிலையங்கள், பால் குளிரூட்டும் நிலையங்களில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக கூண்டோடு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும். ஓராண்டுக்கு மேல் எந்த ஒரு அதிகாரியும், ஊழியரும் ஆவின் நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதிக்கக்கூடாது. அப்படி செய்தால் மட்டுமே ஆவின் நிர்வாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுத்திட முடியும்.

 

ஆவின் பால் தரமான பால், தாய்ப்பாலுக்கு நிகரான பால் என விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. அதற்கான உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.