Skip to main content

''அனிதாவை மனதில் தாங்குவோம், போராடுவோம்...'' -எஸ்.எஸ்.சிவசங்கர் உருக்கம்...

Published on 02/09/2020 | Edited on 02/09/2020
S. S. Sivasankar

 

 

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவை சுமந்த அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த +2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நீட் தேர்வில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி குழுமூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

''நீட் தேர்வு எதிர்ப்பு போராளி அனிதாவின் மூன்றாமாண்டு நினைவு நாள்'' என்ற தலைப்பில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

 

அனிதா என்ற பெயரை கேட்டவுடன், நீட் தேர்வு எதிர்ப்பு குறித்தே தமிழர்கள் மனதில் அலையடிக்கும். நீட் தேர்வுக்கு எதிராக தன்னுயிரை ஈந்து, நீட் தேர்வுக்கு எதிரான அடையாளமாகிப் போனார் அனிதா. 

 

நீட் தேர்வு வந்த போது, அன்றைய முதல்வர் கலைஞர் அதனை தமிழகத்தில் அமல்படுத்த விடாமல் தடுத்து விட்டார். இந்தியாவிலேயே நீட்டை எதிர்த்த ஒரே முதல்வர் கலைஞர். அது தான் அவரது பகுத்தாயும் பார்வை, தொலைநோக்குப் பார்வை, சமூகநீதிப் பார்வை.

 

 இத்தனைக்கும் நீட் தேர்வைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க இருந்தது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலும் தி.மு.க இருந்தது. ஆனாலும் கூட்டணி கட்சியான காங்கிரஸின் நடவடிக்கையை எதிர்த்தார். அவர் தான் கலைஞர், அவர் தான் முதல்வர்.

 

இன்றைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க  கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டும் அ.தி.மு.க ஆட்சி தடுமாறுகிறது, நீட் தேர்வை எதிர்க்க முடியாமல். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடிருந்த வரை நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடவில்லை. அவர் பெயரில் ஆட்சி நடத்துவதாக சொல்லிக் கொள்ளும் எடப்பாடி, ஓ.பி.எஸ் கூட்டணி நீட் தேர்விற்கு சிகப்பு கம்பளம் விரித்து விட்டனர். 

 

நீட் தேர்வு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் நுழைவது முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது. இதனை கடந்த மூன்று ஆண்டுகளாக கண்கூடாக கண்டு வருகிறோம்.

 

நீட் தேர்விற்கு எதிராக தி.மு.க குரல் கொடுத்த போது பலரும் நீட் தேர்வின் அபாயத்தை உணரவில்லை. திராவிடர் கழகம் நீட் தேர்விற்கு எதிராக அனைத்துக் கட்சிகளை இணைத்து போராட்டம் நடத்தியது. அரியலூரில் அந்தப் போராட்டம் எனது தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட போது தான் அனிதாவை சந்தித்தேன். 

 

+2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஏழை குடும்பத்தை சேர்ந்த அனிதாவின் தந்தையால் லட்சங்களை செலவழித்து நீட் தேர்வு பயிற்சிக்கு அனிதாவை அனுப்ப  முடியாததால் இந்த நிலை. நீட் தேர்வு இல்லா விட்டால், அனிதாவின் மதிப்பெண்ணிற்கு எம்.பி.பி.எஸ் சேர இடம் கிடைத்திருக்கும். இப்போது மருத்துவம் படித்துக் கொண்டிருந்திருப்பார்.

 

 அனிதா நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தான், நீட்டின் கோர முகத்தை எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்தது. +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. அனிதா போன்று பாதிக்கப்பட்டவர்கள் திரண்டனர். போராட்டம் வலுப்பெற்றது.

அனிதா மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து, தங்கள் அவல நிலையை எடுத்துரைத்தனர். நீட் தேர்விற்கு எதிரான உணர்வு வலுப் பெற்றது. அரசு தரப்பையும் சந்தித்தனர் மாணவர்கள். 

 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என மத்திய, மாநில அமைச்சர்கள் உறுதி அளித்தனர். "உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள், நியாயம் கிடைக்கும்", என ஒரு அமைச்சரே அறிவுரை கூறினார். மாணவர் அமைப்பு அதற்கான நடவடிக்கையை எடுத்தது. 

 

நம்பிக்கையோடு டெல்லி உச்சநீதிமன்றம் சென்றார் அனிதா. ஆனால் அங்கு பெரும் கொடூரம் காத்திருந்தது. அனிதா மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தரப்பை காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையை துவங்க ஆணையிடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் முதுகில் குத்தியதை உணர்ந்தார் அனிதா. உச்சபட்ச நீதி அமைப்பு கை கழுவியது அனிதாவை குலைத்து விட்டது.

 

தன் நாடே தன்னை ஏமாற்றி விட்டது, தான் வருடம் முழுதும் கஷ்டப்பட்டு படித்து பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது, இந்த அரசுகளை நம்பி வாழ முடியுமா என மனம் நொந்து தன்னை மாய்த்துக் கொண்டார் அனிதா. 

 

அனிதாவின் மரணம் தான், அதுவரை அரசியல் பக்கம் பார்வையை திருப்பாமல் இருந்த இளைஞர்களை அரசியல் மயப்படுத்தியது. போராடா விட்டால் தங்கள் உரிமைகள் பறிபோகும் என்ற எண்ணம் வந்தது. " தகுதி" என்ற பெயரில் ஏமாற்று வேலைகள் நடப்பதை உணர்ந்தனர். நீட் தேர்விற்கு எதிரான அலை தோன்றியது.

 

இந்தி மொழி திணிக்கப்பட்டால் தன் தாய் மொழி தமிழ் அழிந்து விடும் என்ற எண்ணத்தில் தான், தன்னை தீயிட்டு எரித்துக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார் மொழிப் போர் தியாகி "கீழப்பழூர் சின்னசாமி". கீழப்பழூரும் அரியலூர் மாவட்டம் தான், அனிதாவின் ஊரான குழுமூரும் அரியலூர் மாவட்டம் தான். 

 

அனிதா தனக்காக மட்டும் அந்த 'இறுதி' முடிவை எடுக்கவில்லை. அனிதா ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியிருப்பார்,"என்னை போன்று மற்ற மாணவர்களும் பாதித்து விடக் கூடாது என்று தான் போராடுகிறேன்", என்று. எதிர்கால மாணவர்களின் நிலை உணர்ந்து தான் அந்த முடிவை எடுத்திருக்கிறார். நீட் தேர்வை கொளுத்தும் 'தீப்பந்தமாய்' மாறி இருக்கிறார்.

 

தமிழ் காக்க போராடிய கீழப்பழூர் சின்னசாமி போல தான், சமூகநீதி காக்க போராடிய அனிதாவும்.

 

நீட் தேர்வை ஒழிப்பதே அனிதாவின் தியாகத்திற்கான மரியாதையாக அமையும். நீட் தேர்வை ஒழித்து, அனிதாவை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயிலும் காலம் வரை போராடுவோம். அனிதாவை மனதில் தாங்குவோம், போராடுவோம். 

 

அனிதாவுக்கு வீர வணக்கம்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருமாவளவன் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக்காகப் போராடுகிறார்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Minister Sivasankar said that Thirumavalavan is giving voice to social justice

இந்தியா கூட்டணியின் திமுக தலைமையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட  அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் திங்கள் கிழமை இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், ‘நம்மை திசை திருப்ப பல்வேறு பொய்ச்செய்திகள் வரும். நாம் திசை திரும்பாமல் தேர்தல் பணியாற்ற‌ வேண்டும். சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் வெற்றி. பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை பாஜக பறிக்க முயன்றபோது தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக்காக போராடுகிறார். திருமாவளவன் நாடாளுமன்றத்தில் சமூகநீதியின் குரலாக இருக்கிறார். தனது வாழ்வை சமூகத்திற்கு அர்ப்பணித்தவர். அவரின் உடல்நலத்தை பாதுகாக்கும் அளவிற்காகவாவது ஓய்வு கொடுங்கள். இந்த கூட்டணி ஒருங்கிணைந்த கூட்டணியாக இருக்கவும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இருப்பவர் திருமாவளவன்” எனப் பேசினார்.

Minister Sivasankar said that Thirumavalavan is giving voice to social justice

இதனைத் தொடர்ந்து பேசிய சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் திருமாவளவன், “27 ஆம் தேதி நான் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய‌ இருக்கிறேன். குறுகிய கால இடைவெளியில் நாம் சிறப்பாக செயல்பட்டு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். வரும் 22 நாட்கள் திமுக தலைமையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை நமது கட்சியினர் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடாமல் என்னை பார்க்க கட்சியினர் வந்தால் ஏமாற்றுகின்றனர் என்று பொருள். விசிக கட்சியினர் அனைவரும் வாக்கு சேகரிக்கும் பணியாளர்கள் தான். எனவே தங்களுக்கு கூட்டணி அளிக்கும் பணியை சரியாக செயல்படுத்த வேண்டும்.

எதிர் அணியினர் திட்டமிட்டு நம்மை சீண்டுவார்கள். நாம் இந்த சூதில் இரையாகி விடக்கூடாது. நாம் நேர்மறையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திமுகவின் சாதனைகளை பரப்பலாம். ஏன் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற வைக்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி. இந்தியாவை யார் ஆள வேண்டுமென்பதே கேள்வி. தமிழ்நாட்டை போல கேரளா, டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார் எனப் பல்வேறு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியினர் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அதிமுகவால் ஒன்றும் செய்ய முடியாது என்றால் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. இந்தியா கூட்டணியின் கட்சியினர் தங்களின் மாநிலங்களில் வெற்றி பெற்றால் பாஜகவை தூக்கி ஏறிய முடியும். இதை முதலில் கணித்து வியூகத்தை வகுத்தவர் மு.க. ஸ்டாலின். எனவே தான் விசிக தொடர்ந்து திமுகவுடன் பயணிக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணம், திமுக - விசிக உறவு என்பதை கொள்கை சார்ந்த கூட்டணி என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். விசிகவிற்கு மட்டும்தான் கலைஞர் இப்படி ஒரு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த கூட்டணி 2018 காவிரி போராட்டத்தில் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது.

2009ம் ஆண்டு என்னை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற பல மணி நேரம் பேசினார்கள். நான் அப்போது தனி ஒருவனாக சிக்கினேன். ஆனால் கலைஞரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தேன். எவ்வளவு எதிர்ப்பு இருந்தபோதும் இந்த கூட்டணி 28 தொகுதிகளை வென்றது. திமுக தோல்விக்கு காரணம் திருமாவளவன் - கிருஷ்ணசாமி என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால் கலைஞர் அதற்கு பதிலளித்து பேசுகையில் விசிக வாக்குகளால் தான் கடலூரில் 5/9 தொகுதிகளை வென்றோம் என்று தெரிவித்தார். இதனை திமுக தலைவர் உள்ளிட்ட அனைவரும் நன்கு அறிவர்.

நானும் மு.க. ஸ்டாலினும் சமூகநீதிக்காக கை கோர்த்து இருக்கிறோம். பாஜகவிற்கு எதிரான ஒரு அணியை கட்டமைத்ததில் விசிகவின் பங்கு கணிசமானது. இந்த நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியினர் மற்றும் திமுகவினர் பேசினர். கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.