Advertisment

“இப்போராட்டம் டெல்லி மக்களுக்கானது மட்டுமல்ல”- நாடெங்கும் செல்ல இருக்கும் கெஜ்ரிவால்

publive-image

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றவும் நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

Advertisment

வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது. அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்’ என்று தெரிவித்தனர். ‘அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படும் நிலையில் தீர்ப்பை வரவேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “எங்களது கைகள் கட்டப்பட்டு நீந்துவதற்காக தண்ணீரில் வீசப்பட்டோம். ஆனால், எங்களால் மிதக்க முடிந்ததால் தடைகள் வந்த பொழுதும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளோம்” எனத் தெரிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருந்த சில மணி நேரத்திலேயே டெல்லி சேவைகள் துறை செயலாளரை பணி நீக்கம் செய்து அதிரடி காட்டினார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆனால் மத்திய அரசோ, தேசியத்தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சில நாட்களுக்கு முன் பிறப்பித்தார். தேசியத்தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் (1991)-ஐ திருத்தும் வகையிலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நிராகரிக்கும் வகையிலும் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து அதற்கு மறுநாளே, தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தீர்ப்பினை செல்லாததாக ஆக்கும் வகையில் தேசியத்தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

Advertisment

இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், "உச்சநீதிமன்றம் பல ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரவு ஒன்றை பிறப்பித்து டெல்லி மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்தது.ஆனால், ஒன்றிய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்து அதனை பறித்துவிட்டது.மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது என அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர இருக்கிறேன்.இந்தப் போராட்டமானது டெல்லி மக்களுக்கானது மட்டுமல்ல;இது இந்திய ஜனநாயகத்தையும், பாபா சாகேப் வழங்கிய அரசியல் சட்டத்தையும், நீதித்துறையையும், இந்த நாட்டையும் காப்பாற்றும் போராட்டம்; இதற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe