ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலையை 15 நாட்கள் மட்டும் மூடிவிட்டு மீண்டும் திறந்து விடுவார்கள்! கண்துடைப்பு நாடகம்!- வைகோ ஆவேசம்

04:26 PM May 25, 2018 | Anonymous (not verified)


ஸ்டெர்லைட் ஆலையை 15 நாட்கள் மட்டும் மூடிவிட்டு மீண்டும் திறந்து விடுவார்கள். இது அரசின் கண்துடைப்பு நாடகம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுதுவதும் இன்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நெல்லையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி. போராட்டத்தில் ஒரு போலீசாருக்கு கூட உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதில் இருந்தே திட்டமிட்ட சதி என்பது தெரிகிறது. சீருடை இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டிற்கு நியாயம் கூறவே வாகனங்களை போலீசாரே தீ வைத்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் போலீசாரும் அதிகாரிகளும் தான். ஆஸ்பத்திரியில் காயம் அடைந்தவர்களை பார்க்கவிடாமல் அவர்கள் உறவினர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்னர்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இப்போது இந்த அரசு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது கண்துடைப்பு நாடகம். 15 நாட்கள் மட்டும் மூடிவிட்டு மீண்டும் திறந்து விடுவார்கள். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான கலெக்டர், எஸ்.பி.யை பணியிட மாற்றம் செய்தால் போதாது. அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி.கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட புரட்சி தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆலையை மீண்டும் திறந்தால் ஸ்டெர்லைட் ஆலை முன்பு சென்று போராடுவோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு கைது செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் தான் என் உயிர் அடங்கும். நிரந்தரமாக மூடும்வரை இளைஞர்கள் போராடவேண்டும்.

முதல்வர் சென்னையில் இருந்து பேசுவதைவிட தூத்துக்குடி வந்து மக்களை பார்க்க வேண்டும். தமிழ் மண்ணை காக்க கட்சி பாகுபாடு இல்லாமல் வீரமாக போராடுகிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து போராடுவேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT