ADVERTISEMENT

“மன்னிக்கவே முடியாத துரோகம்; வரலாறு ஒரு போதும் மன்னிக்காது” - சீமான்

08:16 AM Oct 20, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அறிக்கையை வரவேற்று பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “போராட்டக் களத்தில் நடந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த அருணா ஜெகதீசனுக்கு வாழ்த்துகள்.

காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப்பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, தூத்துக்குடி மக்களைச் சுட்டுக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; மக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாக நின்றார்கள் என்பதும் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்றுகுவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பதை அருணா ஜெகதீசன் ஆதாரத்தோடு உறுதிசெய்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு குறித்தான முன் எச்சரிக்கை மக்களுக்குக் கொடுக்கப்படாததும், சுடப்பட்டவர்களில் ஒருவர்கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்டப் படுகொலை என்பதை ஆணித்தரமாகக் கூற போதுமான காரணமாகும்.

துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? எதற்காகப் பச்சைப்படுகொலைகளை அரங்கேற்றினார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? பிரதமர் மோடியை மனம் நிறைவடையச் செய்யவா? இது மன்னிக்கவே முடியாத கொடுந்துரோகம்! வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களையே அரச வலிமையைக் கொண்டு, படுகொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது” எனக் கூறியுள்ளார்.

தூத்துக்குடி எம்.பி கனிமொழி சென்னை பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் நியாயமான நிவாரணமும் வேலைவாய்ப்பும் வழங்கிய அரசு திமுக. பல முயற்சிகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை. முதல்வர் அதைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். அதில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தூத்துக்குடி மக்களுக்கும் இருக்கிறது. அதில் போராடியவர்களுக்கும் இருக்கிறது எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT