Skip to main content

தி.மு.க - கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு; கம்யூனிஸ்டுகளுக்கு உறுதியான தொகுதிகள்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
 A staunch constituency for communists parties for DMK - seat allocation among alliance parties

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

 A staunch constituency for communists parties for DMK - seat allocation among alliance parties

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி, திமுக பேச்சுவார்த்தை குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று (29.02.2024) நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், வீரபாண்டியன், பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றனர். அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், “போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக நடத்திய பேச்சுவார்த்தையில், தொகுதி ஒதுக்கீடு குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் இன்று (29-02-24) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். அதில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் 40 தொகுதிகளும் எங்களது தொகுதிகளாக கருதி வேலை செய்வோம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோவை, மதுரை தொகுதிகளை மீண்டும் கேட்டுள்ளோம். எந்தெந்தெ தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. கூட்டணியில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை தொகுதி கேட்டு திமுகவுடன், மதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

சார்ந்த செய்திகள்