/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk12 (1).jpg)
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. அதேபோல், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்துள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
சட்டமன்றமா, நாடாளுமன்றமா? - அதிமுகவின் முடிவு என்ன?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். இரண்டு மன்றங்களிலும் உறுப்பினராக இருக்க முடியாது என்பதால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இதில் வைத்தியலிங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கே.பி.முனுசாமி கடந்த ஆண்டுதான் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால், ஒரத்தநாடு, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும். அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் அவர்களின் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும்.
ஆறு வருட பதவிக்காலம், இவர்களுடைய இடத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கிடைக்காது. வைத்தியலிங்கம் இடத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு வருடம் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக பணிபுரிய முடியும். ஆனால், இதிலும் சிக்கல் உள்ளது. புதிய சட்டசபையின் பதவிக்காலம் தொடங்குவதால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களே வாக்களிப்பார்கள்.
தற்போதுள்ள எண்ணிக்கைப்படி, தமிழக சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிஉறுப்பினர்களின் பலம் அதிகமாக இருக்கிறது. மாநிலங்களவை காலியிடங்கள் திமுக வசம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு அதிமுக தலைமை விரைவில் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.பி.முனுசாமி இடத்தில் அதிமுகவின் மூத்த தலைவரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான செம்மலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)