கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில், தி.மு.க. தரப்பினர் கரோனா நிவாரணப் பணிகளை பல இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி விசாரித்தபோது, கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊடகதுறையினரையும், அவர்களதுகுடும்பத்தினரையும் தொடர்புகொண்டு நலன் விசாரித்த மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் மூலம் அவங்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்ய சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை கட்சி நிர்வாகிகள் மூலம் வழங்கும் "ஒன்றிணைவோம் வா" செயல்திட்டத்துக்கான உதவி எண்ணுக்கு ஏகப்பட்ட போன்கால் வருவதாக சொல்கின்றனர். அதனால் அத்தனை பேருக்கும் உதவணும்னா நிறைய பணம் தேவைப்படும். 9 வருசமாக ஆட்சியில் இல்லாத நிலையில், அவ்வளவு பணத்துக்கு என்ன பண்ணுறதுன்னு கட்சி நிர்வாகிகள் திணறிப் போயிருக்கிறார்கள். இந்த நிலைமையை தி.மு.க. தலைமை கவனித்து மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த செயல்திட்டத்தின் முழுமையான வெற்றி கேள்விக்குறியாகி விடும் என்று சொல்கிறார்கள்.