Advertisment

தாகம் தீர்க்க வேண்டிய அரசு, உயிரை எடுக்க வேண்டாம்... சிவசங்கர் கண்டன அறிக்கை 

ss sivasankar - panchayat   drinking water pipes

Advertisment

'ஜல் ஜீவன் திட்டம்' என்ற பெயரில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களின் ஜீவனை எடுத்துகொண்டிருக்கிறார்கள் என அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜல் ஜீவன்' என்ற பிரதமர் மோடியின்அறிவிப்பை பார்த்து, 'மேக் இன் இண்டியா', 'ஸ்விட்ச் பாரத்' போல ஒரு வாயால் சுடும் வடை என கடந்து போய் விட்டோம் பலரும். ஒரு வாரமாக கிராமங்களில் இருந்து வரும் செய்தி, "இது மக்களை வதைக்கும் இம்சை' என புரிய வருகிறது.

2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக குடிநீர் குழாய் இணைப்பு அளிப்பதன் மூலம் பாதுகாக்கப்பட்ட, போதுமான குடிநீர் வழங்குவதுதான் இலட்சியம் என்று வழக்கம் போல் முழங்கினார் பிரதமர் மோடி. அதில் என்ன தவறு, நியாயம் தானே இது என மேம்போக்காக பார்க்கும் போது தோன்றும். ஆனால் அந்தப் பேச்சின் உண்மை அர்த்தம், ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் நடவடிக்கை மூலம் கிராமங்களில் வெளிப்படுகிறது இப்போது.

Advertisment

கடந்த மாதம் கிராம ஊராட்சிகளில் தீவிரமான ஒரு பணி நடைபெற்றது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அடுத்து ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிதாக இணைப்பு வழங்கவும், ஏற்கனவே குடிநீர் இணைப்பு உள்ளவர்கள் அல்லது வீட்டின் அருகில் குடிநீர் இணைப்பு உள்ளவர்களும் வைப்பு தொகையாக ரூ 1,000 செலுத்த வேண்டும். அத்துடன் மாதம் ரூ 50 கட்டணமாக, ஒரு வருடத்திற்கு ரூ 600 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் என்பது அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய அத்தியாவசிய சேவை. இன்றைய நிலையில் அரசு வழங்கும் "ஒரே" சேவையும் இது தான். இதையும் கட்டண சேவையாக்குவது கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக தான். அது எப்படி என்ற கேள்வி வரும்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் குடிநீர் வழங்க ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதை எதிர்த்து மக்கள் போராடி வருவது சிலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம்.

2018 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகிக்கும் பணியை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டது. ரூ 8,000 கோடி மதிப்பிலான டெண்டர். இந்த டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனம் "சூயஸ்". இது பிரான்ஸில் தலைமை அலுவலகம் கொண்டது. உலகின் மூன்றாவது பெரிய "தண்ணீர் வியாபார" நிறுவனம். ஆமாம், தண்ணீரை வைத்து சம்பாதிக்கும் நிறுவனம். இவர்கள் கையில் தான் கோவை நகரின் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் என்பது விலைமதிக்க முடியாத இயற்கை வளம். ஆனால் அரசு அதை விலை மதிக்க முடியாத வணிகப் பொருளாக பார்க்கிறது. இதன் வெளிப்பாடு தான் கோவை - சூயஸ் கதை. எதிர்காலத்தில், சூயஸ் நிர்ணயிப்பதுதான் குடிநீர் கட்டணம் என்றாகும். பல நாடுகளில் இது போன்ற 'குடிநீருக்கு அதிககட்டணம்' என்றப் பிரச்சனைகள் எழுந்து ரணகளமாக இருக்கிறது.

கோவையில் இன்று நடப்பதுதான் நாளை கிராமங்களில் நடக்கபோகிறது. கிராமங்களில் வைப்புதொகை வசூல் செய்து, மாதகட்டணம் வசூல் செய்து மக்களை பழக்கப்படுத்தி விட்டு, ஒவ்வொரு மாவட்டமும் மொத்தமாக தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படும். ஊராட்சி மன்றங்கள் கட்டணம் வசூல் செய்து, தனியார் நிறுவனத்திற்கு வழங்கினால்தான் தண்ணீர் வரும், இல்லாவிட்டால் தண்ணீர் நிறுத்தப்படும்.

மின்சாரம் தனியார் மயமாவது போல், தண்ணீரை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது காலப் போக்கில் நடத்துவார்கள். சென்னை அம்பானிக்கும், செங்கல்பட்டு அதானிக்கும் வழங்கப்படும். இவை எல்லாம் பின்னாடி நிகழப்போவது. இப்போதே பிரச்சனைகள் ஆரம்பித்து விட்டது.

பல கிராமங்களில், இந்த வைப்புதொகை வசூல் பல பிரச்சனைகளை கிளப்பி உள்ளது. வைப்புத் தொகை வசூலுக்கு போகும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே உரசல் வருகிறது.

சில ஊராட்சிகளில், கடந்த காலங்களில் ஊராட்சி மன்றதலைவர், துணைத் தலைவராக இருந்தவர்களிடம் வைப்புதொகை பணத்தை கொடுத்து விட்டு இணைப்பை பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ரசீது இருக்காது. தேரதல் நடக்காமல் அதிகாரிகள் ஆண்ட காலத்தில் அவர்கள் வசூல் செய்து கொண்டு இணைப்பு வழங்கியதும் உண்டு. இப்போது இவர்களை புதிதாக வைப்புதொகை கேட்கும்போது, பிரச்சனை தான்.

சிலர் தங்கள் சொந்த செலவில் வெகு தூரம் குழாயை நீட்டித்து இணைப்பு பெற்றிருப்பார்கள். அவர்கள், "என் செலவில் குழாயை நீட்டித்தேன். நான் ஏன் பணம் கட்ட வேண்டும்?", என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் தனித்தனிக் காரணங்களோடு பிரச்சனைகள் வெடித்து வருகின்றன.

"கரோனா கொடுங்காலத்தில் வேலையும் இல்லை, பணமும் இல்லை. எப்படி பணம் கட்ட முடியும்?", " அரசு உதவி தரவில்லை என்று நாங்களே கோபத்தில் இருக்கிறோம். இதில் எங்கக் கிட்ட பணம் கேக்கறீங்களா?", என கேள்விகள் அணிவகுக்கின்றன. பேச்சு வளர்ந்து சண்டையும் ஆகிறது. ஒரு ஊரில் அடிதடியாகி வழக்கும் ஆகிவிட்டது. சில இடங்களில் பழைய ஊராட்சி மன்றதேர்தல் சண்டையும் இதில் வெளிப்படுகிறது.

தமிழகத்தில் முதன் முதலில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து நல்ல குடிநீர் வழங்கியவர் தலைவர் கலைஞர். குடிநீர் வடிகால் வாரியம் என்ற ஒரு அமைப்பை நிறுவியவர் தலைவர் கலைஞர். வறண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம், காவிரி பாயும் தர்மபுரி மாவட்டத்திற்கு ஒக்கனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வழங்கியவர் அன்றைய துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின். இந்த தமிழ்நாட்டில் குடிநீருக்கு கட்டணம் வசூல் செய்வது அநியாயம். அரசு இந்த குடிநீர் வசூல் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பல பிரச்சனைகள் எழும்.

தாகம் தீர்க்க வேண்டிய அரசு, உயிரை எடுக்க வேண்டாம் !”

இவ்வாறு கூறியுள்ளார்.

Pipe Drinking water panchayat ss sivasankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe