ADVERTISEMENT

வாக்குப்பதிவு நாளில் கருப்பு கொடி பறக்கவிட்டு தேர்தலை புறக்கணிக்க ஸ்ரீரங்க மக்கள் முடிவு!

01:28 PM Apr 13, 2019 | Anonymous (not verified)

ஸ்ரீரங்கம் என்பது அதிமுகவின் கோட்டை, தனது பூர்வீகம் என்று கடந்த தேர்தல் காலங்களில் ஜெயலலிதா இங்கு பேசியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிமுக சார்பில் இங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீரங்க மக்களின் கருப்பு கொடி, தேர்தல் புறக்கணிப்பு என்பது அரசியல்வாதிகள் இடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோயில் 5, 6 மற்றும் 7 பிரகாரங்களை சுற்றி உள்ள 320 ஏக்கர் நிலத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் பெரிய பெரிய மாடி வீடுகள் எல்லாம் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகே வீடு இருப்பது பெரிய பாக்கியம் என்று எண்ணி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அதிகாரிகளாக இருக்கும் பலரின் வீடுகள் இருக்கிறது.

இந்த வீடுகளில் அடிமனை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் அதில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் எனவும் அதனால் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வாடகைதாரர்கள் ஆக முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் 2007 ஆம் ஆண்டு அப்போதைய கோவில் இணை ஆணையர் கவிதா நோட்டீஸ் கொடுத்தார்.

இதற்கு பொதுமக்கள் தரப்பிலும் அரசியல்வாதிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக விவகாரம் நிறுத்திவைக்கப்பட்டது. கோவில் இணை ஆணையராக இருந்த கவிதா இந்த விவகாரத்தின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டார். ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் இந்த உத்தரவால் ஸ்ரீரங்கம் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு வீடுகளை விற்கவோ அடமானம் வைக்கவோ செய்ய முடியாத நிலை உருவானது. இதற்கு ஒரு படி மேலே போய் இந்த பகுதியில் பத்திரப்பதிவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் இந்த உத்தரவு தொடர்பான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணை நிறைவடைந்து வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அடிமனை மீட்புக் குழு மற்றும் அரங்கர் நகர் நல சங்கத்தின் அவசர கூட்டம் ஸ்ரீரங்கத்தில் மூத்த சங்கத் துணைத் தலைவர் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் ஹேமநாதன் பேசினார். அப்போது இந்த கூட்டத்தில் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனையை தீர்க்க அரசு மற்றும் அரசியல் கட்சிகளை கண்டித்து வரும் எம்.பி. தேர்தலை புறக்கணிப்பது என்றும் ஓட்டுப்பதிவு நாளான அன்று பதினெட்டாம் தேதி காலையில் வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் மக்களின் இந்த அதிரடி முடிவு ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT