Advertisment

“குற்றச்சாட்டுகள் எல்லாம் வைக்கக்கூடாது..” - வேலுமுருகனை கண்டித்த பேரவைத் தலைவர்

Speaker Appavu condemns Velumurugan in the Assembly

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றும்(9.12.2024), நாளையும்(10.12.2024) நடைபெறுகிறது. முதல்நாளான இன்று சட்டப்பேரவை கூடிய உடன், மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெஞ்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான வேல்முருகன், “தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக, மழை இயற்கை பேரிடர் காலங்களில் எனது பண்ருட்டி தொகுதி, பகண்டை பெரிய பகண்டை, சின்ன பகண்டை, குமாரமங்கலம், தொரப்பாடி, பட்டாம்பாக்கம் நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளையொட்டிய கிராமங்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி மக்கள் மிகப்பெரிய துயரத்தையும், துன்பத்தையும் சந்திக்கிறார்கள். அதனால் நான்காண்டு காலத்தில் முதல்முறையாக துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தேன். பகண்டையில் பாதுகாக்கப்பட்ட ஒரு தடுப்பணையும், வெள்ளம் ஊருக்குள் வராமல் இருக்கத் தடுப்புச்சுவரையும் ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்தேன். அமைச்சரும் அதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். ஆனால் அது என்ன காரணத்திற்குக்கோ இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் விடுபட்டு நிற்கிறது. இதுவரை எனது தொகுதிக்கு உங்கள் துறையில் இருந்து ஒரு சிறு நற்பணிகள் கூட நடக்கவில்லை” என்று கூறினார்.

Advertisment

உடனே குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, எந்த ஒரு சிறு பணிகளும் கூடச் செய்யவில்லை என்று நீங்கள் சொல்லக்கூடாது. அதனால் இதனை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறேன்” என்றார். அதற்கு, வேல்முருகன், “எதுவும் செய்யவில்லை என்றால் அப்படிதானே கூறமுடியும்” என்றார். இதற்கு பதிலளித்த அவைத் தலைவர் அப்பாவு, “எதைச் செய்யவில்லை என்று கூறவேண்டும்; அதைவிட்டுவிட்டு பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது. அதனால் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுவோம். மூத்த உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் குற்றச்சாடுகளை வைக்கக்கூடாது, எது வேண்டுமோ அதனைக் கேள்வியாக கேட்டுப் பெறவேண்டும்” என்றார்.

அதன்பிறகு பேசிய வேலுமுருகன், “உடனடியாக இந்த கூட்டத் தொடரிலேயே அந்த பணிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்கி, அதனைத் தடுத்தால் தான் மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். மக்களின் துன்பத்தை, வலியை உணர்ந்து இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன். தடுப்பணை அல்லது கான்கீட் சுவர் அமைத்து தருவார்களா ?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “உறுப்பினர் கேட்டவுடனேயே இந்த கூட்டத்தொடரில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது நிதி ஒதுக்குவது தொடர்பான வழிமுறை எல்லாம் தெரியாமல் அறியாமையில் கூறுகிறார். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் நிதி ஆதாரத்தை பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று பதிலளித்தார்.

duraimurgan velmurugan APPAVU
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe