“அதிமுகவிலிருந்து என்னை மட்டுமல்ல... யாரையும் பிரிக்க முடியாது” - எஸ்.பி. வேலுமணி

Sp Velumani says Not just me, nobody can be separated from AIADMK

அ.தி.மு.க கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால்கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,கோவை மாவட்டம், அண்ணா சிலை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “கடந்த இரண்டரை கால திமுக ஆட்சியில், கோவை மாவட்டத்திற்கு என எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே எனச் சிலர் பேர் கூறி பிரச்சனைகளை கிளப்பி வருகிறார்கள். திமுக ஐ.டி.விங் குழுவினர் ஏதாவது செய்து அதிமுகவில் குழப்பத்தை உண்டாக்க இதுபோன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே அவருடைய சொந்தகட்சிக்கே துரோகம் செய்தவர். ஆனால், நான் மட்டுமல்ல அதிமுகவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் நிற்கிறோம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் தலைவர். நான் என்றைக்குமே அதிமுக காரன் தான். அதுபோல் எனது குடும்பமும் அதிமுக காரர்கள் தான். எனவே என்ன குழப்பம் செய்தாலும் இங்கு ஒன்றும் நடக்காது. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார். அதனால், இதுபோன்று ஏதாவது ஒரு சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்லயாரையும் பிரிக்க முடியாது” என்று கூறினார்.

admk covai
இதையும் படியுங்கள்
Subscribe