Skip to main content

'புலம்பாமல் அமைதியாக தூங்குங்க எடப்பாடி'-அமைச்சர் ரகுபதி காட்டம்

Published on 28/05/2025 | Edited on 28/05/2025
'Sleep peacefully, Edappadi, without crying' - Minister Raghupathi attack

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார்.  மக்கள் மத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 மாதங்களில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து  ஞானசேகரன் குற்றவாளி என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் வரும் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  'எக்ஸ்' வலைத்தளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

'Sleep peacefully, Edappadi, without crying' - Minister Raghupathi attack

இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?. ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?. சிறப்பு புலாணாய்வு குழுவில் (SIT) பணியாற்றிய காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்?. உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?. இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த சார்? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது.

வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?. யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?. பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. காலம் மாறும், காட்சிகள் மாறும், விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அந்த சார் யாராக இருந்தாலும் கூண்டேற்றட்டப்படுவார். சார்களை காக்கும் சார்களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு அரைவேக்காடு என்பதை அவரே அம்பலப்படுத்திக்கொள்கிறார்.

உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மை தான். அந்த SIT தமிழ்நாடு காவல்துறைகோ திமுக அரசுக்கோ தொடர்பு இல்லாததா? அந்த SIT வேறு மாநில அதிகாரிகளோ ஒன்றிய அரசின் அதிகாரிகளோ இல்லை. அவர்கள் தமிழ்நாடு அரசின் காவல்துறை தானே? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் SIT குழு சிறப்பாக செயல்பட்டது என்றால் திமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது என்று தான் பொருள்.

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தது திமுக அரசின் காவல்துறை. அவர் ஜாமீன் பெறாத வகையில் நீதிமன்றத்தில் வாதாடியது  திமுக அரசின் வழக்கறிஞர்கள்.

'Sleep peacefully, Edappadi, without crying' - Minister Raghupathi attack

வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் நியமித்த SIT குழு பெண் அதிகாரிகள் மூவரும் அவர்களுக்கு துணையாக இருந்த விசாரணை குழுவும் திமுக அரசின் காவல்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள். இப்படி, திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறையால் தான் ஐந்தே மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி ஏன் எரிகிறது? உடல் முழுவதும் இவ்வளவு எரிவது நல்லதல்ல, மருத்துவரை அணுகுவது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிமுகவினர், விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளை கைது செய்தது சிபிஐ.  தீர்ப்பு வழங்கியது சிபிஐ நீதிமன்றம். சாட்சிகள் பிறழ்சாட்சியமாக மாறாமல் காத்தது திமுக அரசின் காவல்துறை என்ற போதிலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தாம் தான் காரணம் வாய்க்கூசாமல் எடப்பாடி பழனிசாமி கூறியதை பார்த்து சந்தி சிரித்தது என்பது தானே உண்மை.

அண்ணா பல்கலை. வழக்கில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடந்தது என்பதற்காக நீதிமன்றம் தான் பாராட்டுக்குரியது எடப்பாடி பழனிசாமி சொல்வதும், விசாரித்து ஆதாரங்களை சமர்பித்த காவல்துறையினருக்கும், குற்றத்தை நிரூபிக்க வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பாராட்டுக்குரியவர்கள் இல்லை என சொல்வதும் அவரின் அறியாமையை காட்டுகிறது.

"அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?" என்று முதலமைச்சரைப் பார்த்து கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரத்தை  SIT நியமித்த நீதிமன்றத்திடம் ஓரிரு நாட்களுக்குள் கொடுத்துவிட்டு, சொல்லும் செயலும் ஒன்றே மானமுள்ளவர் பழனிசாமி என்று நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு மானங்கெட்ட பிறவி பழனிசாமி என ஊடகங்கள் முன்பு ஒப்புக்கொள்ள வேண்டும். அதை செய்வீரா?...

அதிமுக ஆட்சி அமைந்தால் "அந்த சார்கள்?" யார் என்பதை கண்டுபிடிப்போம் என எந்த அடிப்படை அறிவோ வெட்கவோ இல்லாமல் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, கொடநாடு கொலை, கொள்ளை... போன்ற அதிமுக ஆட்சியில் நடந்த குற்றங்களின் விசாரணையை எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படி கையாண்டது என்பது உலகத்திற்கே தெரியும்.

அண்ணா பல்கலை. வழக்கை விசாரித்த SIT குழு  நீதிமன்றத்தின் முழு மேற்பார்வையில் செயல்பட்டது, அதுகூட திமுக அரசின் காவல்துறைக்கு உட்பட்டது என்றாலும் விசாரணை நீதிமன்றமும் மேற்பார்வை பார்த்த சென்னை உயர்நீதிமன்றமும் திமுக ஆட்சிக்கு உட்பட்டவை இல்லையே?... அந்த சார் யார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால் நேரடியாக நீதிமன்றத்தில் சமர்பித்து சந்தேகத்தை இப்போதே உறுதி செய்யலாமே? எந்த ஆதாரமும் கையில் இல்லாமல் கடந்த 5 மாதமாக புலம்பியது போதும் எடப்பாடி பழனிசாமி அவர்களே? குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கி தரும் வேலையை திமுக அரசு சிறப்பாக செய்துவிட்டது. நீங்கள் புலம்பாமல் அமைதியாக தூங்குங்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததை திமுக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அம்பலப்படுத்தியால், காழ்ப்புணர்ச்சியாக அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி "யார் அந்த சார்?" என சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் செய்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றத்தில் கொடுத்து நிரூபித்திருக்க வேண்டாமா? - ஏன் ஆதாரங்களை இதுவரை தரவில்லை? அவதூறுக்கு ஆதாரம் இருந்தால் தானே தர முடியும்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்