Skip to main content

சிவகாசி: திமுக உள்ளடிகளால் திணறும் காங்கிரஸ்!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

Sivagasi Constituency congress and admk computation


நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம். சிவகாசி தொகுதி வேட்பாளர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி, நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளிவந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக, சிவகாசி தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ:

 

லட்சுமி கணேசன் (அதிமுக)  -  அசோகன் (காங்கிரஸ்)


தொடர்ந்து 10 வருடங்களாக அமைச்சரின் தொகுதியாக இருந்துவரும் சிவகாசி, ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறியதால், தற்போது வி.ஐ.பி. தொகுதி கிடையாது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சிவகாசி முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் அசோகனும், அதிமுக வேட்பாளராக திருத்தங்கல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் லட்சுமி கணேசனும், போட்டியிடுகின்றனர். இவ்விருவருமே நாடார் சமுதாயத்தைச் சேர்தவர்கள். அமமுக வேட்பாளராக சாமிக்காளை களமிறங்கியிருக்கிறார். 

 

வாக்காளர் எண்ணிக்கையில் தொகுதியில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடார் சமுதாய வாக்குகள், இருவரில் யாருக்கு சாதகமாக உள்ளன?

 

கடந்த 21ஆம் தேதி, மண்டபம் ஒன்றில் 48 நாடார் தெருக்கட்டுகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தி, அசோகனை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளனர். ஏனென்றால், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அசோகன் மட்டுமே நாடார்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார். திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் வாக்கு வங்கி, இவ்வேட்பாளருக்கு பலம் சேர்க்கிறது. சிவகாசி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஞானசேகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்காமல், அசோகனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கூடுதல் பலம். கடந்த 6 வருடங்களாக,  பட்டாசுத் தொழில் தடுமாற்றம் கண்டு, தற்போது முடங்கிப் போனதால், தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை, காங்கிரஸ் அறுவடை செய்ய முயற்சிக்கிறது.

 

சிவகாசி தொகுதியில், நாடார்களுக்கும் தேவர் சமுதாயத்துக்குமான இடைவெளி, அசோகனைத் தள்ளிவைத்துப் பார்க்கிறது. சிவகாசி தொகுதியில் திமுக நிர்வாகிகள் பலரும் தேவர் சமுதாயத்தவரே. தோழர்களும், சிறுத்தைகளும் தரும் ஒத்துழைப்பு, காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக தரப்பிலிருந்து சரிவர கிடைக்கவில்லை.

 

‘அப்பாய்ன்மெண்ட்’ இல்லாமல் சந்திக்க முடியாத, ஏஸி அறையிலேயே பழக்கப்பட்ட ‘முதலாளி’ என்பதால், தலைவர் சிலைகளுக்கு மாலை போடும்போது, அசோகனுக்கு வியர்த்து விறுவிறுத்து, பெரிதாக மூச்சு வாங்குவது ஒரு குறையாகப் பேசப்படுகிறது. ராஜேந்திரபாலாஜி போட்டியிடாத தொகுதி என்பதால், திமுக மேலிடமும்கூட பாராமுகமாக உள்ளது.

 

தொகுதி சாதகமாக இல்லை என்பதால்தானே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறினார்? இதுவே, அதிமுக வேட்பாளர் லட்சுமிக்கு பெரிய மைனஸ். ஆனாலும், ‘சிவகாசியில் அதிமுக வெற்றிபெறாவிட்டால், அது தனக்கு ஏற்பட்ட தோல்வியே..’ என்பதை அறிந்துவைத்திருக்கும் ராஜேந்திரபாலாஜி, ஒரு தன்மானப் பிரச்சினையாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, சகல அஸ்திரங்களையும் ஏவி இந்தத் தொகுதி மீது தனி கவனம் செலுத்திவருகிறார். தேர்தல் தட்பவெப்பத்துக்கு ஏற்றவாறு,  ஓட்டுக்கு ரூ.500-லிருந்து ரூ.1000 வரை தரக்கூடிய திட்டத்தில் இருக்கிறது அதிமுக தரப்பு.  சரி, வேட்பாளர் லட்சுமி எப்படி?

 

Sivagasi Constituency congress and admk computation

 

திருத்தங்கல் நகர்மன்றத் தலைவராக லட்சுமி இருந்தபோது, ரூ.41 கோடி செலவிலான வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. அரசு கலைக் கல்லூரியை இத்தொகுதிக்கு கொண்டுவந்தது உள்ளிட்ட சாதனைகள் சிலவற்றை ராஜேந்திரபாலாஜி பட்டியலிட்டாலும், ‘ரயில்வே மேம்பாலங்கள் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையே?’ என்பது போன்ற கேள்விகள் இத்தொகுதியில் எழுப்பப்படுகிறது.

 

நகர்மன்றத் தலைவராக லட்சுமி இருந்தபோது, பொது பிரச்சினைக்காக ‘பப்ளிக்’ யாரும் அவருடைய வீட்டுக்குப் போனால், ‘இங்கேயெல்லாம் பார்க்க வரக்கூடாது. எனக்கு ஒன்னும் தெரியாது. நான் பேருக்குத்தான் உட்கார்ந்திருக்கேன். பிரச்சினை எதுவானாலும் வைஸ் சேர்மனைப் போய் பாருங்க..’ என்று விரட்டியடிப்பாராம். இப்போதுகூட, கணவர் கணேசன் பின்னால் இருந்து இயக்கக்கூடிய, ஒரு பொம்மை எம்.எல்.ஏ.வாக மட்டுமே லட்சுமியால் செயல்படமுடியும் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 

 

குறிப்பிட்ட சில பகுதிகளில், தேவர் சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ளக்கூடியவராக இருக்கிறார் அமமுக வேட்பாளர் சாமிக்காளை.  ‘நாடார் – தேவர்’ இடைவெளி காரணமாக, அசோகனுக்கு விழ வேண்டிய திமுக கூட்டணி வாக்குகள், ‘ஸ்ட்ரெந்த்’ காட்ட வேண்டும் என்ற சாதிப்பற்றின் காரணமாக, சாமிக்காளை பக்கம் திசைமாறிச் செல்வதற்கான சூழலும் இருக்கிறது.

 

நாம் தமிழர் – கனகப்ரியா, தொகுதி முழுவதும் நடந்தபடியே ஒரு சுற்றுவந்து, மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் – முகுந்தன்,  பெயரளவுக்கே வேட்பாளர். 

 

Sivagasi Constituency congress and admk computation

 

‘நாடார் வேட்பாளர்’ என்ற அடையாளத்தால், தேவர் உள்ளிட்ட பிற சமுதாயத்தவரின் வாக்குகள் வேறுபக்கம் திரும்புவதும், திமுக உள்ளடி வேலைகளும் அசோகனுக்கு சாதகமற்றவை. இரட்டை இலை சின்னமும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பின்னணியும், என்ன விலை கொடுத்தாவது வாக்குகளை வாங்கும் பணபலமும், அதிமுக வேட்பாளருக்கு ‘லட்சுமிகரமாக’ உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்