Advertisment

முதலமைச்சராகிறாரா சித்தராமையா? டி.கே.சிவக்குமாரின் பேட்டியால் எகிறும் எதிர்பார்ப்பு

Is Siddaramaiah the Chief Minister? DK Sivakumar's interview raises expectations

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களில் வெற்றி பெற்றன.

Advertisment

இந்த நிலையில் கர்நாடகாவின் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே கர்நாடக முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது கர்நாடகாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைத்த தீர்மான அறிக்கையின் அடிப்படையில் யார் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெறும் என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் சித்தராமையா இன்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றார்.

டி.கே.சிவகுமாரிடம் “நீங்கள் ஏன் டெல்லி செல்லவில்லை” என்ற கேள்விக்கு, “நான் தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். அதனால் டெல்லி செல்லவில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், “எனக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, இன்று டெல்லிக்கு செல்லவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. “காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்குஎன் வாழ்த்துகள்” என டி.கே.சிவக்குமார் பேட்டி ஒன்றில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதல்வர் போட்டியில் இருந்த டி.கே.சிவக்குமார் சித்தராமையாவுக்கு வாழ்த்து தெரிவித்ததால் சித்தராமையா கர்நாடகத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறாரோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது.

மேலும் பேசிய அவர், “நான் போர்க்கொடியும் தூக்கவில்லை, யாரையும் மிரட்டவும் இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 135 பேர் உள்ளனர். என்னிடம் யாரும் இல்லை. கர்நாடக முதலமைச்சர் யார் என்ற முடிவை கட்சியின் மேலிடத்திற்கே விட்டுவிட்டேன். முதலமைச்சர் குறித்து கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” என்றும் கூறியுள்ளார். மே 18 ஆம் தேதி கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Siddaramaiah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe