publive-image

கள்ளச்சாராய விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமானஎடப்பாடி பழனிசாமி, தமிழகஅரசுமீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச் சாராயத்தை அருந்தி 22 பேருக்கு மேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய திமுக நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழகக் காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.

Advertisment

அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்ட விரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல்துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி திமுக நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4 ஆவது வார்டு உறுப்பினர் லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16 ஆவது வார்டு உறுப்பினர்புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்கராயன்பேட்டை கிளையின் திமுக செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி திமுக நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு ஆதரவாளர்களாக இருப்பதால், கடந்த இரண்டு வருடங்களாக அரசின் காவல்துறை இவர்களது நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருந்தும் கைது செய்யாமல் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டி வந்துள்ளது.மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாகச் செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறு இழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சப்பைக் கட்டு கட்டும் வகையில் வசனம் பேசிக்கொண்டிருந்தால், அல்லலுறும் தமிழக மக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.