/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/212_18.jpg)
அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்துவ மக்களின் புனிதத் தளமான ஜெருசலேம் சென்று வர கிறிஸ்துவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கிறிஸ்துவப் பெருமகனார் பென்னி குயிக்கிற்கு மாபெரும் மணிமண்டபம் அமைத்து அதை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்திய நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவிக்கு சிறுபான்மை சமூகத்தினர் வரவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தேர்தலில் போட்டியிட்ட அப்துல்கலாமை முன்மொழிந்தவர் ஜெயலலிதா.
இச்சமயத்தில் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் நல்ல உள்ளம் கொண்ட பெரியவர் வாழ்ந்து வந்தார். அவர்தனக்குச் சொந்தமான நிலத்தில் தனது ஊழியர்கள் மூலம் விவசாயம் செய்து வந்தார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஊர்மக்களுக்கு தானம், தர்மம் செய்வதையும் தலையாயகடமையாகக் கொண்டிருந்தார். இதனால் அப்பகுதி மக்கள் அவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.
சில காலங்கள் சென்றதும் அப்பெரியவர் வயது முதிர்வின் காரணமாக நோயுற்றார். மரணப்படுக்கையின் போது தன் காலத்திற்குப் பின் தன் பொறுப்பிற்கு வருபவர் தன்னைப்போலவே தொடர்ந்து இப்பகுதி மக்களின் மேல் அன்பு காட்டக் கூடியவராகவும் உதவி செய்பவராகவும் இருக்க வேண்டும் என எண்ணினார். தனது விருப்பத்தைத்தனது ஊழியர்களிடம் தெரிவித்தார்.
அப்பெரியவரின் மறைவிற்குப் பிறகு ஒரு நல்ல மனிதருக்கு அப்பெரியவரின் பொறுப்புகள் சென்றடைந்தன. தெரிவு செய்யப்பட்ட மனிதர் ஒரு விவசாயி. அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையாகவும் ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் செய்துவந்தார். விவசாயப் பலன்கள் ஊர்மக்களுக்குச் சென்றடைய உண்மையாக உழைத்தார்.
இதனைக் கண்டு பொறாமை குணம் கொண்ட சில ஊழியர்கள் அந்த விவசாயியின் வேலைகள் தடைப்படும் படியும் பெரியவரின் விருப்பம் நிறைவேறாத படியும் சிலசதி வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், பெரியவரின் பொறுப்பிற்கு வந்த விவசாயி அவற்றைக் கவனமுடன்கையாண்டு பொறுமையாக வேலைகளைச் செய்து துரோகம் செய்த சிலரை அப்புறப்படுத்துகிறார். விளைச்சலை மேம்படுத்துகிறார். நாட்கள் செல்கின்றன. பயிர்கள் வளர்ந்து அறுவடை செய்யப்பட்டு மக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படுகிறது.
இதைத்தான் இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமத்தில் மாத்தேயு 13 ஆவது அதிகாரத்தில் 20 முதல் 30 வசனங்களில் நமக்கு உவமையாகக் கூறுகிறார்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)