Shanmugam said that CPM should contest additional seats 2026 elections

“கடந்த தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை சி.பி.எம். மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிக மிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பெ. சண்முகத்திடம், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி பலமாக உள்ளது; அதே வேளையில் மேலும் வலுவடைய என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சண்முகம், “திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். தற்போது நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக்காப்பாற்றுவதன் மிக அதிக அவசியம் உள்ளது. அதற்கான முறையில் திமுகவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை சிபிஎம் கட்சி கேட்டது. அன்றைய சூழ்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிப்பெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிக மிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கு அது நிச்சயமாக நல்லதாக இருக்காது. ஆகவே, விட்டுக்கொடுப்பது திமுக தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுத் தீர்மானமாகும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசாங்கம் மேலும் நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அதிமுக - பாஜக கூட்டணியை முழுமையாக முறியடித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணி அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கக்கொள்ளும்” என்றார்.

Advertisment