Advertisment

ஏழு தமிழர் விடுதலைக்கு ஆளுனர் ஒப்புதல் அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்! ராமதாஸ்

ramadoss

ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு இம்மாதம் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை காத்திருக்காமல், அதற்கு முன்பாகவே 7 தமிழர் விடுதலைக்கு ஆளுனர் ஒப்புதல் அளிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று பா.ம.கநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது; ஆளுனரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தகக்கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருக்கின்றன.

Advertisment

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலத்தை விட அதிகமாக 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தை அதே ஆண்டின் செப்டம்பர் 9-ஆம் தேதி நிறைவேற்றிய தமிழக அமைச்சரவை அன்றே ஆளுனருக்கும் அனுப்பி வைத்தது.

ஆனால், அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் மீது ஆளுனர் முடிவெடுக்காமல் தாமதித்து வருகிறார். இத்தகைய நிலையில், ஆளுனர் முடிவெடுக்கும் வரை தம்மை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கை இன்று விசாரித்த நீதியரசர் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, 7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுனர் தேவையின்றி தாமதம் செய்து வருவதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ‘‘இராஜிவ்காந்தி படுகொலை தொடர்பான எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், அதன்பிறகு தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுனர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது.

இந்த வழக்கிற்கும் எம்.டி.எம்.ஏ விசாரணைக்கு எந்தத் தொடர்பும் இல்லை. 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் எழுவருடன் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றித் தான் எம்.டி.எம்.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்தப்பட்டு வரும் அந்த அமைப்பின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவை குறித்த ஆவணங்களையெல்லாம் ஆளுனரிடம் அளித்து தெளிவுபடுத்தினீர்களா?’’ எனத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வினா எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

7 தமிழர் விடுதலை பற்றி 2 வாரங்களில் ஆளுனர் முடிவெடுக்க முடியும் என்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுனர் தாமதப்படுத்துவது நியாயமல்ல; அதை ஏற்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் பா.ம.கஎன்னென்ன வாதங்களை பொதுவெளியில் முன்வைத்து வந்ததோ, அதையேதான் உச்சநீதிமன்றமும் இப்போது கூறியிருக்கிறது. இந்த விஷயத்தில் ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 7 தமிழர் விடுதலையை தமிழக அரசு விரைந்து உறுதி செய்ய வேண்டும்.

cnc

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுனர் தேவையின்றி காலதாமதம் செய்து வந்தார். ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக ஒப்புதல் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் வலியுறுத்தியது. உடனடியாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆளுனரை சந்தித்து வலியுறுத்தினார்; அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழுவை அனுப்பி அழுத்தம் கொடுத்தார்; நிறைவாக இடைக்கால ஏற்பாடாக அரசாணை பிறப்பித்தார். அதன் பயனாகவே 7.50% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தார். இப்போது உச்சநீதிமன்றமே கூறி விட்ட நிலையில், 7 தமிழர் விடுதலை தொடர்பான விஷயத்தில் ஆளுனருக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் அரசுக்கு வெற்றி கிடைக்கும் என்பது உறுதி.

எனவே, உச்சநீதிமன்றம் கூறியவாறு ஆளுனர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவருக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு, இம்மாதம் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை காத்திருக்காமல், அதற்கு முன்பாகவே 7 தமிழர் விடுதலைக்கு ஆளுனர் ஒப்புதல் அளிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

7 Tamils Issue Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe