“எழுவர் விடுதலை; மாற்றுக் கருத்து இல்லை..” - திருநாவுக்கரசர் எம்.பி.

“Seven released; There is no alternative ”- Thirunavukarasar MP

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று (22.05.2021) திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி, அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வுசெய்தார்.அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற அவர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், முதற்கட்டமாக 30,000 முகக் கவசங்களை அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுத்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தற்போது ஆய்வு மேற்கொள்வதின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள, நேற்று முதலமைச்சர் திருச்சிக்கு வருகைதந்து ஆய்வு செய்தார். அப்போது, பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை அறைகளை திறந்துவைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். முதலாவதாக அவருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது படுக்கை வசதி இல்லை என்று சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான இடங்களில் சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தடுப்புப் பணிகளை மிக சிறப்பாக செய்துவருகிறது. மத்திய அரசானது இந்தியா முழுவதும் சுமார் 50 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதில் சென்னையில் ஒன்றும் பொன்மலைப் பகுதியில் ஒன்றும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், என்னுடைய சார்பில் திருச்சி மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையிலும், பொன்மலை ரயில்வே பணிமனையில் அருகிலும், தற்போது செயல்பாட்டில் இல்லாமல் கிடக்கும் பெல் நிறுவனத்திலும் இந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவினால் மற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இது பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அமைச்சருக்கு நான் கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன்.

நகரப் பகுதிகளில் அதிகமான தொற்று இருந்துவந்த நிலையில், தற்போது கிராமப்புறங்களிலும் அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்பட ஆரம்பித்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் களப்பணியாளர்களை வைத்து வீடுவீடாகச் சென்று அவர்களுக்கு நோய்த் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரிக்கையை தமிழக முதலமைச்சருக்கு முன்வைக்கிறேன்.

நான் சென்று பார்க்கக் கூடிய இடங்களிலெல்லாம் மருத்துவர்களும் செவிலியர்களும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை அளிப்பதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே அவற்றை ஈடுசெய்யும் வகையில் தொடர்ந்து மருத்துவர்களும் செவிலியர்களும் பணியமர்த்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் முறையான சிகிச்சையைக் கொடுத்து அவர்களை மீண்டும் பணி செய்ய விரும்புவோர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பேரறிவாளன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 30 நாட்கள் பரோலில் வெளியே சென்றிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

அவரிடம் செய்தியாளர்கள், “அவர்கள் விடுதலை முழுமையாக கிடைக்குமா” என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருநாவுக்கரசர், “உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் பரோலில் வெளியே அனுப்பப்பட்டது எப்போதும் இருக்கின்ற நடைமுறைதான்.முழுமையான விடுதலைபெற வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டியது நீதிமன்றம் மட்டுமே. நீதிமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வோம் இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

congress thirunavukkarasar
இதையும் படியுங்கள்
Subscribe