Skip to main content

“இனி தளபதி கோட்டை...!” - கோவையில் செந்தில் பாலாஜி அதிரடி

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

SenthilBalaji addressed press in coimbatore

 

தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வலுவான பகுதி என கூறப்படும் கொங்கு மண்டலமான கோவையில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றுள்ளது.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் தி.மு.க.வால் ஒரு தொகுதியைக் கூட வெல்லமுடியாத நிலையில், இந்த 8 மாதத்தில் கோவை மாநகராட்சி உள்பட மாவட்டத்தின் ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

 

இந்த அபார வெற்றிக்கு முழுக்க முழுக்க அமைச்சர் செந்தில்பாலாஜியே காரணம் என திமுகவினரே உரக்கச்சொல்லி வருகின்றனர். கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்படும் செந்தில்பாலாஜி, கோவையின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்திவந்திருக்கிறார். பல்வேறு ஆய்வு கூட்டங்கள், கட்சியினரோடு ஆலோசனைகள், பிரம்மாண்டமான மாநாடுகள் என கோவையில் அதிரடியாக செயல்பட்டு தி.மு.க. உடன்பிறப்புகளை உற்சாகமாக செயல்பட வைத்தார். அதன் தொடர்ச்சியாக தான் தற்போது கோவை மாநகராட்சி உள்ளிட்ட. உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.வெற்றி பெற்றுள்ளது.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் ஆளுமையான செயல்பாட்டை வெகுவாக பாராட்டியுள்ளார். செந்தில் பாலாஜி அவ்வப்போது கோவைக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். 

 

இந்த நிலையில் கோவைக்கு  26ந் தேதி வந்த செந்தில் பாலாஜி, 'கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் ஒருபோதும் கூறியதில்லை; இனி இந்த கோவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டை' என்றார்.

 

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு மக்களிடம் நன்றி என்பதை வெறும் வார்த்தையாக சொல்லாமல் தமிழக முதல்வரின் மக்கள் நல திட்டங்கள் மூலம் நாங்கள் சொல்வோம். சென்ற அ.தி.மு.க.ஆட்சியில் பல்வேறு திட்டப் பணி என கணக்கு காட்டி அரசு நிதியை பெற்று சுயநலத்துடன் அதை வேறு பணிகள் என கணக்கு கூறி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் விரிவான விசாரணை செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கோவையை அதிமுகவின் கோட்டை என்று பொதுமக்கள் ஒருபோதும் கூறியதே இல்லை; அ.தி.மு.க.வினர் தான் அப்படியொரு மாயப் பிரச்சாரத்தை செய்து வந்தனர். இனி எப்போதுமே கோவை என்பது முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினின் கோட்டைதான்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்