Senthil Balaji's brother calls for investigation

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், அமலாக்கத்துறைதரப்பிலிருந்து அவரை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜரானார்.

Advertisment

இந்த விசாரணையில், நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது எனக் கேட்டார். காலை தொடங்கி இரவு வரை நடந்த சோதனையின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அமலாக்கத்துறையினர் நடந்து கொண்ட விதம் ஆகியவை குறித்து அவர் சுருக்கமாக எடுத்துரைத்தார். இதன்பின் அமலாக்கத்துறை கொடுத்த மனு நகல் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினர் கொடுத்த மனு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினார். அதனையடுத்து மனுவை கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, 13 ஆம் தேதி காலை 7 மணி முதல் 14 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டதால் மீண்டும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். விசாரணை தொடர்வதில் இருந்து தாங்கள் தடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறையினர் வாதிட்டனர். வழக்கில் தொடர்புடைய தொகை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். சோதனையின் போது தங்களுக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அமலாக்கத்துறையினர் கூறினர்.

விசாரணைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அமலாக்கத்துறை ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாசித்துக் காண்பித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஒரு நபர் கைது செய்யப்படும் போது அவரது உறவுகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுவது அவசியமாக இருக்கிறது. அப்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை என செந்தில் பாலாஜியின் மனைவி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் தெரிவித்த அமலாக்கத்துறையினர் தாங்கள் முறைப்படி தகவல் தெரிவித்ததாகவும், குறிப்பாக அவரது சகோதரர் அஷோக் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அஷோக் குமார் நேரில் வந்து ஆஜராகும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.