ADVERTISEMENT

“சொந்த பணமே செலவு செய்தாரா இல்லையான்னு தெரியல... இதுல கடனாளி ஆகிவிட்டாராம்” - செந்தில் பாலாஜி பேட்டி 

07:04 PM Mar 20, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (20.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து துறை வாரியான அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மகளிருக்கு உரிமைத் தொகையாக 1000 ரூபாய் அனைவருக்கும் வழங்கப்படுவதாகச் சொன்னார்கள். ஆனால், இப்பொழுது தகுதியான குடும்பத் தலைவிகளைத் தேர்ந்தெடுத்து மாதந்தோறும் 1000 ரூபாய் என்கிறார்கள். எந்த அடிப்படையில் தகுதியைத் தீர்மானிக்கிறீர்கள். 7000 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளார்கள். அப்படிப் பார்த்தால் சுமார் 1 கோடி பேருக்கு கொடுக்க முடியுமா? அது கூட சரியாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றும் பட்ஜெட்” எனக் கூறியிருந்தார்.

அதேபோல் நேற்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில், ''நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் சம்பாதித்த அத்தனை பணமும் அவரக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அவையெல்லாம் குருவி சேர்ப்பது போல் நான் சிறுக சிறுக சேர்த்து வைத்தது. டீசல் போடணும், பெட்ரோல் போடணும் என்று எல்லாம் செலவாகிவிட்டது. எலக்சன் முடிந்தவுடன் நான் சத்தியமாக கடனாளியாகத் தான் இருக்கிறேன். இந்த நேரத்தில் மறுபடியும் ஒரு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் இந்திய அரசியல் களத்தில் ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க 80 கோடி ரூபாயிலிருந்து 120 கோடி ரூபாய் வரை செலவு பண்ண வேண்டும் என்பது பொதுவான கணக்கு. இதை செய்து விட்டு இங்கு கிளீன் பாலிடிக்ஸ் என்று பேச முடியாது'' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ''கடனாளியாகிவிட்டேன் சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம் செலவு பண்ணிட்டேன் என்று சொன்னதாக பார்த்தேன். எனக்குத் தெரிந்து ஒரு எட்டு ஒன்பது வருடத்தில் எந்த காவல்துறை அதிகாரியும் 30 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளத்தை சேர்க்க முடியாது. ஏனென்றால் அரவக்குறிச்சி தேர்தலில் அவருடைய தேர்தல் செலவு 30 கோடி என நினைக்கிறேன். அவர மாதிரியே ஒரு எக்ஸ்.எல் சீட்டில் நான் பார்த்தேன். சொந்த நிதி எவ்வளவு என இருந்தது என்று பார்த்ததில் நில் (NIL) என்று இருந்தது. சொந்த பணமே செலவு செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கடனாளி ஆகிவிட்டேன் என்று சொல்கிறார். வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார் அந்த நபர். அதெல்லாம் போலீஸ் ஆபீஸராக இருந்து கர்நாடகாவில் சிறுக சிறுக சேர்த்த பணம் என்று கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். இன்று பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சொன்னது மிக மிக மட்ட ரகமான அரசியல் செய்யும் கருத்து. அவர் கடந்த காலங்களை திரும்பிப் பார்க்க வேண்டும். அவர் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு இருந்த நிலையை பார்க்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் தமிழக முதல்வர் திறமையால், தன்னுடைய உழைப்பால் தமிழகத்தை தலை நிமிரச் செய்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT