Skip to main content

ஜூனியர் அமைச்சர்களுக்கு டஃப் கொடுக்கும் சீனியர் அமைச்சர்!!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021
Senior ministers who run non-stop like junior ministers

 

புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முழு வீச்சோடு செயல்படுவதை ஒவ்வொரு மாவட்டத்திலும் காண முடிகிறது. ஜூனியர் அமைச்சர்களை விட சீனியர் அமைச்சர்களும் இடைவிடாமல் இயங்குகிறார்கள். அந்த வரிசையில் சீனியரான அமைச்சர் ஈரோடு சு.முத்துச்சாமி, அவரின் வேகமான செயல்பாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து அமைச்சருடன் பயணிக்கிறார்கள்.  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 25 ந் தேதி பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வீட்டு வசதித்துறை அமைச்சரான சு.முத்துசாமி அங்கு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

 

பிறகு நம்மிடம் பேசிய அவர், “தற்போதைய நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி சற்று குறைவாகவே இருந்தன. அதை அதிகரித்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் 131 ஆக இருந்த ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள், 250 ஆக  உயர்த்தப்படுகிறது. ஓரிரு நாளில், அவை செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதேபோல, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 550 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியை, 650 ஆக உயர்த்தியுள்ளோம். அவ்வளாகத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட, 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் வருகிற 28 ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும். அடுத்த ஒரு வாரத்தில் மேலும், 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. ஜூன், 20ந் தேதிக்குள் மேலும் 200 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. 

 

Senior ministers who run non-stop like junior ministers

 

இதன் மூலம், 1,550 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி, பெருந்துறையில் இருக்கும். ஈரோடு மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டத்தினருக்கும், படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இணைப்பு கிடைக்கவில்லை என்ற புகார் வராமல் இங்கு சிகிச்சை பார்க்கப்படும். இதுதவிர கரோனா சிகிச்சைக்கான 3,500 சாதாரண படுக்கைகள் பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 1,000 படுக்கைகள் தவிர மற்றவை காலியாகத் தான் உள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள், மருத்துவ சிகிச்சை தேவை என்போர் அங்கு சிகிச்சையில் உள்ளனர். அதுபோல, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி அரசு மருத்துவமனைகளில், தலா 100 படுக்கை ஆக்சிஜன் வசதியுடன் தரம் உயர்கிறது. இருப்பினும், அங்குக் குறிப்பிட்ட படுக்கைகளில் மட்டும் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவர். மற்ற படுக்கைகள், பிற கட்டடங்களில், வெளி நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி, சிகிச்சை தொடரும்” என்றார்.

 

கடந்த 15 நாட்களில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் விரைவாகக் கட்டப்பட்டு, அவை கரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் சிகிச்சைக்காகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.