Skip to main content

செங்கோட்டையனின் அடுத்த நாடகம்... பாமக 'தாங்கள் ஏதோ நேர்மையின் சிகரம்' எனக் காட்டிக் கொள்ள... தங்கம் தென்னரசு கண்டனம் 

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

 

அதிமுக அரசின் அரசியல் நாடகங்கள் பார்த்துப் பழகியவை. ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் நடத்துவது மாணவர்களின் வாழ்க்கையோடு நடக்கிறது. இதைப் போன்ற மக்கள் விரோதம் எதுவும் இருக்க முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 

தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

'நீட்' தேர்வு என்ற பலிபீடத்தை உருவாக்கி மாணவர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்த மத்திய, மாநில அரசுகள்;  இப்போது பள்ளி மாணவ,மாணவியரின் தொடக்கக் கல்விக் கனவையும் சிதைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்கள். மத்திய அரசு அமல்படுத்த துடித்து, மாநில அரசின் ஒப்புதலோடு அமலாக இருக்கும் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறை என்பது ஏழை, அடித்தட்டு, நடுத்தர மக்களை கல்விச் சாலைக்குள் நுழைய விடாமலும், நுழைந்தவர்களையும் திட்டமிட்டு வெளியேற்றும் சதிச்செயலின் வெளிப்பாடு என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது.

 

ramadoss



திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி அவர்கள், இது தொடர்பாக தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிக்கைகள் தமிழ்ச்சமூகத்தின் மாணவர்கள் நலனை உள்ளடக்கியதாகவும் இந்நாட்டின் சமூகநீதியின் குரலாகவும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு வருகிறது. இந்த அறிக்கைகள் மூலம் பாடம் கற்றுக் கொள்ளாத தமிழக அரசு தொடர்ந்து தனது அக்கறையின்மை மூலமாக தமிழக மாணவர் சமுதாயத்துக்கு எத்தகைய படுகுழியைத் தோண்டுகிறோம் என்ற ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகிறது.
 

மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அடித்தள மக்களைப் பற்றி கவலைப்படாமல் தனது வர்ணாசிரமதர்ம எண்ணத்தோடு கல்வித்துறையின் பாடத்திட்டம் முதல் கல்வித்துறையின் சட்டதிட்டம் வரை மாற்றி வருகிறது. இன்னார் தான் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்ற குலதர்மம் நோக்கிச் சென்று கொண்டுள்ளது. அத்தகைய மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அ.தி.மு.க அரசும் செயல்படுத்தி வருகிறது. அண்ணாவின் பெயரால், திராவிடம் என்ற பெயரையும் தாங்கிய கட்சி என்ற சொரணையே இல்லாமல் முதுகுகாட்டி நிற்கிறது அ.தி.மு.க. அரசு.இதனால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அக்கறை சிறிதும் இவர்களுக்கு இல்லை.

 

t



5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த தகவல் வந்ததுமே தமிழக சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன்.' புதிய கல்வித் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் மாநில அரசு பொதுத் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்கும்' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிமொழியளித்தார். சட்டமன்றத்தில் சொன்னதற்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை நடந்து கொண்டது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், '2018-19ம் கல்வியாண்டு முதல் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது' சுற்றறிக்கை வெளியிட்டார்கள்.உடனே இதுபற்றி அமைச்சரிடம் கேட்டதும், “பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் அரசாணை வெளியிடவில்லை” என்று சொல்கிறார். அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ சொல்லாமல் அரசு அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப முடியுமா? முடியாது. இது முதல் நாடகம்.
 

கழகத் தலைவர் தளபதி அவர்கள் அறிக்கை வெளியிட்டதும், 'தமிழகத்துக்கு மட்டும் மூன்று ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளோம்' என்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சொன்னார். ஆனால் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வந்தது.  அதன்பிறகு கழகத் தலைவர் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
 

செங்கோட்டையனின் அடுத்த நாடகம் அரங்கேறியது.  'மத்திய அரசின் முடிவுப்படியே இந்த பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும்'  என்றார் அமைச்சர். 'யாரையும் ஃபெயில் செய்ய மாட்டோம்' என்று சொன்னார் அமைச்சர். இந்த நிலையில்  அனைத்து வகை பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து, அந்த மாணவர்களின் அனைத்து விபரங்களையும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் விபரங்களை சேகரித்து கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றத் தொடங்கினார்கள். திடீரென்று, 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு அவரவர் பள்ளியில் இல்லாமல் வேறு பள்ளிகளில் நடத்தப்படும் என்றார்கள். அதற்கு எதிர்ப்பு வந்ததும், அவரவர் பள்ளியில் எழுதலாம் என்றார்கள்.


 

 

தேர்வுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள். அதற்கு எதிர்ப்பு வலுத்ததும், பள்ளிகளே தேர்வு கட்டணத்தை செலுத்தும் என்றார்கள். 'தேர்வு நடத்துவோம், ஆனால் தேர்ச்சியை அறிவிக்க மாட்டோம்' என்று சொன்னார்கள். எத்தனை நாடகங்கள். அதிமுக அரசின் அரசியல் நாடகங்கள் பார்த்துப் பழகியவை. ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் நடத்துவது மாணவர்களின் வாழ்க்கையோடு நடக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. இதனை வேடிக்கை பார்க்க முடியாது.
 

நேற்றைய தினம் இன்னொரு தகவல் வந்துள்ளது. அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக, 'தாங்கள் ஏதோ நேர்மையின் சிகரம்' எனக் காட்டிக் கொள்வதற்காக தமிழக அரசை எதிர்ப்பது போன்ற நாடகம் ஆடுவதற்கு ஒரு ஆர்ப்பாட்டம் அறிவித்தார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் வாக்குறுதி காரணமாக வாபஸ் வாங்கி விட்டார்கள். அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் என்ன வாக்குறுதி கொடுத்துள்ளார் என்றால், '5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்' என்று மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களிடம் சொன்னாராம் அமைச்சர். உடனே போராட்டத்தை கைவிட்டு விட்டார்கள். வேலிக்கு ஓணான் சாட்சியாக இருக்கிறது இந்த இறுதி நாடகம்.
 

இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடக்கும் என்பது அமைச்சரின் கருத்து. அடுத்த ஆண்டு கைவிடப்படும் என்று சொல்லவில்லை அமைச்சர். கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று சொல்லி இருக்கிறார். மத்திய பாஜக அரசு அடுத்த ஆண்டும் தேர்வு நடத்தியாக வேண்டும் என்று சொன்னதும், அடுத்த ஆண்டும் நடத்துவார்கள். எனவே மத்திய மாநில அரசுகளின் கல்வித்துறை கழுத்து நெரிப்புகள் தொடரப்போகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.


 

 

இதைப் போன்ற மக்கள் விரோதம் எதுவும் இருக்க முடியாது. தமிழின விரோதம் எதுவும் இருக்க முடியாது. பல நூறு ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட இச்சமூகம், இந்த நூற்றாண்டில் தான் சமூகநீதி, பல்வேறு சலுகைகள் மூலமாக பள்ளி, கல்லூரிகளுக்குள் நுழைந்தார்கள். அவர்களை மீண்டும் கல்விக்கூடத்துக்கு வெளியில் நிறுத்தும் மனுவாட்சிக்கு வழிவகுக்கும் இந்தக் கல்வித்துறை நடவடிக்கைகளை அனைவரும் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். 
 

தமிழக அரசு 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை இந்த ஆண்டு நடத்தவும் கூடாது. இனி எந்த ஆண்டும் தொடங்கவும் கூடாது என்ற எங்கள் கழகத் தலைவரின் நிலைப்பாட்டை, அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோ சொன்ன குட்டி ஸ்டோரி; விருதுநகர் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 The short story told by Durai Vaiko; the minister answered on the stage!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அமைந்துள்ளது விஸ்வநத்தம் கிராமம். இப்பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாகப் பயனற்று நில மாசுபாட்டை ஏற்படுத்தி வந்தது. இதையறிந்த விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், குப்பை மேடாகப் பயனற்றுக் கிடந்த அரசு நிலத்தை மீட்டு குறுங்காடு அமைக்கத் திட்டமிட்டனர். விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அன்றாடம் வேலை செய்யும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி அரசிடம் அனுமதி கேட்டு பணிகளைத் துவங்க வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்துள்ளது. 

இந்த நிலையில் தான், விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் பணியைப் பார்த்து பாராட்டிவிட்டு தனிப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் ஞாபகம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்து குறுங்காடுகள் அமைக்க உதவி கேட்க, பணிகள் தொடங்க அனைத்து உதவிகளையும் துரை வைகோ ஃபோன் மூலமே செய்து கொடுத்துள்ளார். செல்போனில் குறுங்காடு அமைக்கும் குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, உடனே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் கொடுக்க அமைச்சரும் தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, குறுங்காடு அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஊராட்சி தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தார். 

இந்த கூட்டு முயற்சியால் முதற்கட்டமாக விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மரக் கன்றுகளை நட்டு நிகழ்வினை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக குறுங்காட்டிற்கு 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட  முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக LED திரையில் திரையிடப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  துரை வைகோ, 'விதைப்பது ஒரு முறை வாழட்டும் தலைமுறை' குறுங்காடு திட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, குறுங்காட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள் நட இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 14 மாதங்களில் தான் கொடுத்த வாக்கை செய்து காட்டிய பின்னணியை தனது கட்சியின் தலைவரும் தந்தையுமான வைகோவை முன்னிறுத்தி திருக்குறளுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேடையில், அண்ணன் தங்கம் தென்னரசு என அழைத்து, இருவருக்கும் 2 தலைமுறையாக இருக்கும் உறவு பந்தத்தை எடுத்துக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசியவர், ''நான் நல்லா இருக்கணும் என எப்போதும் நினைக்கிறது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அமைச்சர் தங்கம் தென்னரசு..'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து உணர்வுப்பூர்வமாக பேசிய  துரை வைகோ, குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நிகழ்ச்சிக்கு நேரம் வாங்க சென்றதாகவும், அப்போது அன்புடன் பேசிய அமைச்சர், ''உங்க அப்பா தான் புலி புலினு இருந்தார்னா.. நீ மரம் செடி கொடின்னு இருக்கியே.. சீட்டு வாங்கி அரசியல் வேலை பாரு..'' என அன்புடன் கடிந்துகொண்டதாகவும், அதற்கு ''நான் இல்லாத காலத்திலும் இதை அமைத்துத் தந்தவன் வைகோ மகன். அவனது கட்சி என்பார்கள். அதுவே போதும். இந்த 32 ஏக்கர் குறுங்காடு எனது சின்ன உதவி..'' என சொல்லியதாக எல்லோர் மத்தியிலும் இருவருக்குள் நடந்த நிகழ்வை கூறினார். 

நிகழ்வில் இருந்த பத்திரிகையாளர்களை குறிப்பிட்டு பேசியவர், ''தான் அரசியலில் போட்டியிட இங்கு வரவில்லை..'' எனத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து தனது உரையின் முடிவில் பேசியவர், தமிழக அரசின் பசுமைத் திட்டம் பற்றியும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் விஸ்வ வனம் அமைப்பை பற்றியும் பெருமிதத்துடன் பேசினார். இறுதி வரியாக, ''உங்களுக்கு ஊர் பிடிக்கலன்னா வேற ஊர் போய்டலாம். மாநிலம், நாடு புடிக்கலன்னா வேற இடம் போயிடலாம். ஆனா நம்ம பூமித்தாய விட்டு நம்ம எங்கேயும் போக முடியாது. ஒன்று சேர்ந்து பூமியை பாதுகாப்போம்..'' என சூளுரைத்து தனது உரையை துரை வைகோ முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான். அவர் தற்போது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார். வைகோவிடம், `உங்களுக்கு பின்பு இந்தக் கட்சியை வழி நடத்த ஒரு ஆள் தேவை. அதற்கு துரை வைகோ பொருத்தமானவர். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..’ எனக் கூறி அரசியலுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டி பேசினார். இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைப்பதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.